Monday, May 25, 2009

போர் குற்றவாளி ராஜபக்ச மீது ஐ.நா.வில் நாளை விசாரணை; இந்தியாவும் இதற்கு உதவிடவேண்டும்: திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை


இலங்கையில் ராஜபக்சே அரசு ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்தது பச்சையான இனப்படுகொலை ஆகும். இது தொடர்பாக நாளை ஐ.நா.வில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இலங்கை அரசிற்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை இந்தியா ஆதரிக்கவேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இலங்கையில் ராஜபக்சே அரசு ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்தது பச்சையான இனப்படுகொலை ஆகும். 1948, 1949 ஆம் ஆண்டுகளில் இனப்படுகொலைக்கு எதிரான ஜெனிவா கன்வென்ஷனின் விதிகளின்படி மிகப்பெரிய போர்க்குற்றங்கள் ஆகும்!

வெள்ளைக்கொடி ஏந்தி ஆயுதங்களைக் கீழே போட்டு தங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வந்த தூதுவர்களைக் கூட அடித்தோ, சுட்டோ கொன்ற கொடுமை எந்த நாட்டு யுத்த வரலாற்றிலும் நடந்திராத ஒன்றாகும்.

ஐ.நா. சபையின் மனித உரிமைக் கவுன்சில்   இது குறித்து, சிங்கள ராஜபக்சக்களின் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தி ஐ.நா.வில் நாளை தீர்மானம் கொண்டுவர ஆயத்தமாகி வருகின்ற செய்தி, இன்னமும் நீதியும், நியாயமும், மனித நேயமும் உலகில் செத்தொழியவில்லை என்ற நம்பிக்கையை நம்முள் விதைக்கிறது.

பல்லாயிரம், பல இலட்சம் தமிழர்களைப் பட்டினிப் போட்டும், அடிபட்டவர்களுக்கு மருந்து கொடுக்காமலும், நச்சு வாயு, கொத்துக் குண்டுகள் போட்டு கொன்று அழித்ததும் உலகில் எங்கும் நடந்திராத கோரத்தாண்டவம் ஆகும்.

தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயர் சூட்டி, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் போரைக் கொச்சைப்படுத்தியதோடு, அங்கே நடந்த கொடுமைகள், வன்புணர்ச்சிகள், தமிழ்ச் சகோதரிகள் மானபங்கம் இவற்றையெல்லாம் இரத்தத்தில் எழுதுகோலைத் துவைத்துத்தான் வெட்கத்துடன் எழுதிடவேண்டும்.

அவ்வளவு ஈவிரக்கம் அற்ற அணுகுமுறை, சிங்கள வெறியன் ராஜபக்சவின் மூர்த்தண்யமான செயல்கள்! இத்தகையவர்கள் வரலாற்றில் தண்டனைக்குத் தப்பவே முடியாது என்பது இயற்கை நியதி.

மொத்தம் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில், 17 நாடுகள்; கனடா, பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்லோவேகியா, சுவிட்சர்லாந்து, சுலோவேனியா உள்பட பல நாடுகள் இதில் அடங்கும் எனத் தெரிகிறது.

இவர்கள் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் கொண்டுவரும் மனித உரிமை மீறல்கள் பற்றிய கூட்டத்தில் இலங்கை அரசினைக் கண்டித்து வெளிப்படையாக எடுக்கும் நடவடிக்கைகளை இந்திய அரசும் ஏற்று அந்நாடுகளுக்கு ஆதரவு தரவேண்டும். இராஜபக்ச அரசை காப்பாற்ற முயலக்கூடாது.

பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளையே பெரிதும் நம்புகிறது ராஜபக்ச அரசு. சீனாவினால் தான் அதிக ஆபத்து நம் நாட்டிற்கு என்று, முப்படைத் தளபதிகளில் ஒருவர் நேற்றுகூட எச்சரித்துள்ளார்!

இந்நிலையில், தொப்புள்கொடி உறவுள்ள தமிழ்நாடு இணைந்த இந்திய அரசுக்குள்ள தார்மீகக் கடமையும் பொறுப்பும் அதிகம் அல்லவா! ஏற்கனவே மத்திய அரசு தமிழ்ப் பெருமக்களது அதிருப்தியை மிக அதிகமாகச் சம்பாதித்துள்ளது. அந்தப் பழியைத் துடைக்க இதைவிட நல்ல சந்தர்ப்பம் அரிய வாய்ப்பு இந்திய அரசுக்கு வேறு கிடையாது.

இலங்கை அரசு தன்னை இதிலிருந்து காப்பாற்றிக் கொள்ள, “மற்றொரு நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடக்கூடாது” என்ற ஒரு வரைவினை எழுதி, அத்தீர்மானத்திற்கு இந்திய அரசு துணை போவதாக வந்துள்ள செய்தி உண்மையாக இருக்கக் கூடாது என்றே வற்புறுத்துகிறோம்.

இதுபற்றி ஒரு வலியுறுத்தலை நமது முதல்வர் கலைஞர் அவர்கள் மத்திய அரசுக்கு உடனே அனுப்பி அதைத் தடுக்கவேண்டும். வெளிநாடுகளுக்குள்ள நியாய உணர்வு கூடவா நமது இந்திய அரசுக்கு இல்லை என்பது நியாயமான கேள்வி அல்லவா?

சார்க் போன்ற இராஜிய உறவுகள் அல்லது வேறு காரணங்களுக்காக இலங்கை அரசுக்கு எதிரான அந்த 17 நாடுகள் போல் மனித உரிமைக் கவுன்சிலில் ஒரு நிலைப்பாட்டினை இந்தியா எடுக்கவேண்டும் அல்லது குறைந்தபட்சம், இலங்கையின் கொடுமைகளை நியாயப்படுத்த முனையாமல் நடுநிலையான ஒரு நிலைப்பாட்டையாவது எடுப்பது அவசியம் அவசரம்!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. எஸ்.எம். கிருஷ்ணா ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதற்கு முன்பு, இந்த மாதிரி மனித உரிமை மீறல் பிரச்சினைகளில் ஒரு தெளிவான திட்டவட்டமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என வற்புறுத்த நமக்கு, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உரிமை உண்டு.

- கி. வீரமணி,
சென்னை
தலைவர்,
25.5.2009
திராவிடர் கழகம்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.