Saturday, May 23, 2009

இடம்பெயர்ந்தோர் நலனில் சிவில் அதிகாரிகள் அசண்டை; யாழ் முகாம்களில் மக்கள் வேதனை!

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் தென்மராட்சி பாடசாலைகளில் தங்கியிருந்த மக்கள் கொடிகாமம், கச்சாய் ராமாவில் முகாமுக்கு மாற்றப்பட்ட மறுதினமே கடும் மழை பெய்து மக்கள் பெரும் துன்பங்களுக்கு முகம்

கொடுத்ததாக முகாம் சென்று திரும்பியவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மக்களுக்கு வேண்டிய உதவிகள் உடனடியாகச் செய்துகொடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து சாவகச்சேரி இந்துக் கல்லூரி, மீசாலை திருநாவுக்கரசு வித்தியாயலம் உள்ளிட்ட பாடசாலைகளில் தங்கியிருந்த 804 குடும்பங்களைச் சேர்ந்த 2,435 பேர் கடந்த 16ம் திகதி சனிக்கிழமை கொடிகாமம், கச்சாய், ராமாவில் இடைத்தங்கல் முகாமுக்கு மாற்றப்பட்டனர். தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொட்டில்களில் அவர்கள் குடும்பம் குடும்பமாகத் தங்கவைக்கப்பட்டனர்.

சாவகச்சேரி மகளிர் கல்லூரி மற்றும் வடமராட்சியிலுள்ள சில பாடசாலைகளில் தங்கியிருந்த இடம்பெயர்ந்தவர்களும் இந்த முகாமுக்கு மாற்றப்படவிருப்பதாக யாழ் அரசாங்க செயலக வட்டாரங்கள் தெரிவிந்திருந்தன.

எனினும்,மக்கள் இந்த முகாமில் குடியேற்றப்பட்ட இரண்டு தினங்களில், திங்கட்கிழமை இரவு பெய்த கடும் மழை காரணமாக முகாம் பகுதி பெருமளவு வெள்ளத்தில் மூழ்கியதாக அங்கு சென்று திரும்பியவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனால் அங்குள்ள மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாக அவர்கள் கூறினர்.

போதிய முன்னேற்பாடு செய்யப்படவில்லை

பாடசாலைகளில் தங்கியிருந்த இடம்பெயர்ந்தவர்களை ஒரு நிரந்தரமான இடத்தில் தங்கவைக்கும் நோக்கில் ராமாவில் இடைத்தங்கல் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதாக அரச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், மக்களை அங்கு அழைத்துச் செல்வதற்கு முன்னர் போதிய அடிக்கட்டுமான வசதிகள் செய்யப்படவில்லை என்று முகாம் சென்று திரும்பிய உதவிப் பணியாளர்கள் எமக்குத் தகவல் தெரிவித்தனர்.

10 X 10 அடி அளவு கொண்ட ஓலைக் குடிசைகளில் ஒவ்வொரு குடும்பமும் தங்கவைக்கப்;பட்டிருப்பதாகவும், கிடுகளால் சூழப்பட்டுள்ள இந்தக் குடிசைகள் காலநிலை மாற்றங்களுக்கு முகம்கொடுக்கக்கூடியளவு போதிய வசதிகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் தெரியவருகிறது.

அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தினால் வழங்கப்பட்ட தரப்பால்கள் போடப்பட்டு, அதற்குமேல் கிடுகுகள் போடப்பட்டே இவற்றின் கூரைகள் அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இவர்களுக்கென அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ள கழிப்பறைகள் போதிய சுகாதார பாதுகாப்பு வசதிகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கழிவறை கிடங்குகள் கொங்றீட் செய்யப்படாமல், தரப்பால்களால் மூடப்பட்டு, சிறிதளவு மண் அதன்மேல் போடப்பட்டிருந்ததாகவும், மழை பெய்ததும் தரப்பால்கள் கழிப்பறைக் கிடங்குக்குள் விழுந்து துர்நாற்றம் வீசுவதாகவும் தெரியவந்துள்ளது.

இவர்களுக்கு உணவு சமைப்பதற்கென தனியான சமையலறை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருக்கின்ற போதிலும், சமைப்பதற்குத் தேவையான விறகுகள் வழங்கப்பட்டிருக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. முகாம் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ள படையினரே பின்னர் இவர்களுக்குத் தேவையான விறகுகளை வழங்கி உதவியதாக முகாமில் தங்கியுள்ள மக்கள் அங்கு சென்ற உதவிப் பணியாளர்களிடம் கூறியுள்ளனர்.

சிவில் அதிகாரிகளின் அசண்டை

இந்த முகாமை அமைத்து அதற்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடுக்கும் முழுப் பொறுப்பும் யாழ் அரச செயலக சிவில் அதிகாரிகளிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தபோதும், அவர்கள் போதியளவு பொறுப்புடன் இந்தக் கடமையை நிறைவேற்றவில்லை என்று முகாமில் வசிப்பவர்கள் கவலை வெளியிட்டதாக முகாம் பணியாளர்கள் மூலம் தெரியவந்துள்ளது.

“இந்த சிவில் அதிகாரிகளும் தமிழர்களே. தம்முடைய மக்கள் படும் துன்பங்களை துடைக்கவேண்டியது இவர்களது கடமை. இவர்களே அதைப் பொறுப்பாகச் செய்யாதபோது, அரசாங்கத்தை நாம் எப்படிக் குற்றம் சுமத்த முடியும்?” என்று முகாம் வாசியொருவர் வேதனையுடன் தெரிவித்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத தொண்டு நிறுவனப் பணியாளர் ஒருவர் எம்மிடம் தகவல் வெளியிட்டார்.

திங்களன்று கடும் மழை பெய்து முழங்கால்களுக்கு மேலால் வெள்ளம் தேங்கிய நிலையிலும் யாழ் அரச செயலகத்திலிருந்து யாரும் உடனடியாக முகாமுக்குச் சென்று வேண்டிய உதவிகளைச் செய்யவில்லை என்று மக்கள் விசனம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

வவுனியா மாவட்டத்தில் இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்கள் பராமரிக்கப்பட்டுவரும் நிலையில், யாழ் குடாநாட்டில் சுமார் பதினோராயிரம் பேருக்கு வேண்டிய வசதிகளை அரசாங்க அதிகாரிகள் உரிய முறையில் செய்யாதது வேதனையான விடயமே என்று அவர் எம்மிடம் தெரிவித்தார்.

“இடம்பெயர்ந்து அனைத்தையும் தொலைத்து, பல நாட்கள் பட்டினி கிடந்து, உடல் வலுவிழந்து, நோய்வாய்ப்பட்ட நிலையிலேயே நாம் யாழ் மண்ணில் தஞ்சம் புகுந்தோம். எங்களை எங்களுடைய தமிழ்பேசும் அதிகாரிகளே கண்டுகொள்ளாமலிருப்பது வேதனை தருகிறது” என்று முகாம் வாசிகள் கவலையுடன் கூறுவதாக முகாமில் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

பா.உ.கள், அமைச்சர்கள் எங்கே?

இது இவ்விதமிருக்க, யாழ் குடாநாட்டு இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு இதுவரையில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ எவரும் வருகைதரவில்லை என்றும் முகாமில் வசிப்போர் கவலை வெளியிட்டுள்ளனர்.

“இவர்களால் உடனடியாக எமக்கு எதுவும் செய்ய முடியாவிட்டாலும், எம்மை வந்து பார்த்து, எமது குறைகளைக் கேட்டறிந்தாலே மனதுக்கு நிம்மதியாக இருக்கும். அதைக்கூட ஏன் இவர்கள் செய்ய முனையவில்லை?” என்று பெயர் குறிப்பிட விரும்பாத முகாம் வாசியொருவர் தம்மைச் சந்தித்த தொண்டுப் பணியாளர் ஒருவரிடம் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பிற மாவட்ட மக்கள் பரிதவிப்பு

ராமாவில் முகாம் உட்பட யாழ் குடாநாட்டு இடம்பெயர்ந்தோர் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பிற மாவட்ட மக்கள் இங்கு அதிகளவு துன்பங்களை அனுபவித்து வருவதாகக் கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் உறவினர்கள், நண்பர்கள் தொடர்புள்ள குடும்பங்களை அவர்கள் சென்று பார்த்து வேண்டிய உதவிகளைச் செய்து வருகிறார்கள்.

ஆனாலும், மன்னார், முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்க யாழ்ப்பாணத்தில் எந்தத் தொடர்பும் கிடையாது. இதனால், இவர்கள் இங்கு கவனிப்பாரற்றுத் தனித்துவிடப்பட்ட மனநிலையில் இருப்பதாக முகாமில் உடனிருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை அவர்களுடைய பிரதேசங்களிலேயே இடைத்தங்கல் முகாமில் தங்கவைத்தால் அவர்களுக்கு அது மிகவும் வசதியாக இருக்கும் என்றும், அவ்வாறன்றி எந்தத் தொடர்புகளுமில்லாத இடங்களில் இவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதால் தனித்துவிடப்பட்ட ஒரு மனோபாவமே இவர்களுக்கு ஏற்படுகிறது என்றும் முகாம் வாசியொருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.