Friday, May 29, 2009

இனப்படுகொலையினால் அழிக்கப்படுவோரை காப்பதற்கான அவசர வேண்டுகோள்: பிரித்தானிய தமிழர் பேரவை

இவ்வாண்டில் ஈழத்தில் நடந்தேறிய இனப்படுகொலையின் விளைவாக 7,000 அப்பாவித்தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள். ஆனால் நம்பகரமான தகவல்களின்படி 25,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
ஆனால் இலங்கை அரசு இன்னமும் சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு அங்கு செல்வதற்குத் தடை விதித்துள்ளது.

நலன்புரிக்கிராமம் என்று அழைக்கப்படும் முகாம்களுக்குள் 300,000ற்கும் அதிகமான தமிழ் அகதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள் என ஐக்கிய நாடுகள் சபை ஊர்ஜிதம் செய்துள்ளது. மேற்கத்தேய ஊடகவியளாளர்கள் அம்மக்களை நெருங்குவதற்கும் இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

பாரிய இன அழிப்பு நடைபெற்றபோது அதனைத் தடுப்பதற்காக புலம்பெயர் சமூகம் தம்மாலான சகல போராட்டங்ளையும் முன் எடுத்தது. ஆனால் அவ்வேளையில் மக்களின் வெளியேற்றத்தை தொடர்ந்தும் சர்வதேசம் வலியுறுத்தி வந்தது. அப்படி மக்கள் வெளியேறினால் அவர்களுக்கு பாதுக்காப்பு உத்தரவாதம் உண்டா? என நாம் கேட்டோம். அப்படி மக்கள் வெளியேறினால் மீண்டும் திட்டமிட்ட இன அழிப்புத் தொடரும் என எமது அச்சத்தையும் வெளியிட்டோம்.

ஆனால் இன்று சர்வதேசம் எதிர்பார்த்த மக்களின் வெளியேற்றம் நடந்துவிட்டது. ஒரு இனம் முற்றுமுழுதாக அழிக்கப்பட முனைந்ததன் வெளிப்பாடாகத்தான் இம் மக்களின் வெளியேற்றம் நடைபெற்றது. இரத்தமும் சதையுமாகத்தான் மக்கள் வெளியேறி வந்தார்கள். அப்படி வந்த மக்கள் இன்னமும் அதே நிலையில்த்தான் வதைமுகாங்களில் வாடுகின்றனர்.

மக்களின் வெளியேற்றத்தைக் கோரிய சர்வதேச சமூகம் இன்று வாய் திறக்காதிருக்கின்றது. மக்கள் சர்வதேச நியமங்களுக்கமைவாக நடாத்தப்பட வேண்டும் . சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் இவ்விடயத்தில் தமக்குள்ள பொறுப்பைத் தட்டிக்களிக்க முடியாது.

வெளியேறிவந்த மக்களின் முழுமையான எண்ணிக்கை என்ன? மனித உயிர்களின் எண்ணிக்கையை 250,000 அல்லது 280,000 எனக் கூற முடியாது. சரியான எண்ணிக்கை என்ன என நாம் அறியத்தவிக்கின்றோம். அப்படிச் செய்யாவிடின் இலங்கை அரசு மக்களைக் கொன்று குவித்துவிட்டு இறுதியில் ஓர் எண்ணிக்கையை கூறும் . அப்போது இன்னொரு இனப்படுகொலையும் நடந்து முடிந்து விடும். ஆகவே நாம் எல்லாரும் இணைந்து செயலாற்றுவதன் மூலம் மக்களின் அவலத்தை தீர்க்க முடியும்.

இரண்டு வயதிற்கும் குறைவான பச்சிளம் பாலகர்கள் முள்வேளியினால் சுற்றிவளைக்கப்பட்ட முகாம்களுக்குள் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர். குழந்தைகள் பெற்றாரிடமிருந்து பிரிக்கப்பட்டு; இருக்கின்றனர். பெரும்பாலான அகதிகள் கிழிந்த கந்தையரன உடை அணிந்தவர்களாக காணப்படுகின்றனர். சுகாதாரக் கேடான நிலை - அம்மக்களுக்கு பெருமளவிலான தொற்று நோய்களை ஏற்படுத்துகின்றது.

இந்த முகாங்களினுள் மனிதாபிமான உதவி அமைப்புக்களை அனுமதிக்குமாறு பல்வேறு நாடுகளும் தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கின்றனர். ஆனால் அதனை இலங்கை அரசு தொடர்ந்து நிராகரித்துவருகின்றது. அத்தோடு தம்மால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான தடயங்களை அழித்து வருகின்றது.

மக்களின் அவலம் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்ந்தும் பிரித்தானிய அரச பிரதிநிதிகளோடு சந்திப்புக்களை மேற்கொண்டு அழுத்தங்களை கொடுத்து வருகின்றது. அத்தோடு ஐரோப்பியப்பாராளுமன்றத்திற்கும், ஐக்கிய நாடுகள் சபையிற்கும் அழுத்தங்களை கொடுத்து வருகின்றது.

மேலும் பிரித்தானிய தமிழர் பேரவை இந்த நாட்டின் தேசிய மற்றும் இதர ஊடகங்களோடு இருக்கும் தொடர்புகள் மூலம் எமது மக்களின் நிலையினை உலகறியச் செய்யும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகின்றது.

பிரித்தானிய தமிழர் பேரவையின் இம்முயற்சிக்கு வலுச்சேர்க்கும் முகமாக எமக்கு ஏற்பட்ட அழிவுகள் அனைத்தும் பதிவுகள் ஆக்கப்பட வேண்டும். இப்பதிவினை மேற்கொள்ளுவதன் மூலம் பிரிந்துபோன எமது உறவுகளை இணைக்க முடியும் , உயிரோடு இருப்பவர்களை ஊர்ஜிதப்படுத்த முடியும். இது மேலதிக அவலத்தைக் குறைக்க உதவும் அத்தோடு சர்வதேசத்தின் தலையீட்டைக் கோரி எமது மக்களின் வாழ்வினை உறுதிசெய்ய உதவும.; எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் வரலாற்றுப் பதிவுகளாக்கப்படவேண்டும்.

அத்தோடு பிரித்தானியாவில் வாழும் ஒவ்வொரு தமிழரும் தமது தொகுதிப் பாராளுமன்றப்பிரதிநிதியோடு தொடர்ந்து சந்திப்புக்களை மேற்கொண்டு எமது உறவுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்துக்கூறவேண்டும். இவ்வாறான தொடர் அழுத்தங்கள் எமது மக்களின் அவலத்தைக் குறைக்க வழிவகுக்கும. அதன்மூலம் எமது மக்களுக்கு நீதி கிடைக்கப் பாடுபடுவோம் என பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டி நிற்கின்றது.

முள்வேலியின் பின்னால் நின்று எமது உறவுகள் புலத்தினைப் பார்த்த வண்ணம் உள்ளனர். எமது கைகளில் இன்று பாரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது.

தமிழீழம், இலங்கை எங்கிலும் ஏதிலிகளாய், கைதிகளாய் வாடும் எமது உறவுகளுக்கு இயல்பு நிலை வாழ்க்கையை ஏற்படுத்தித் தருவதை உடனடித் தேவையாகும். இந்த இலக்கை அடைவதற்கு பிரித்தானியா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இப்பாரிய பணியினை முன்னெடுக்க வேண்டும் என பிரித்தானியத் தமிழர் பேரவை கேட்டுக்கொள்கின்றது.

நன்றி
பிரித்தானிய தமிழர் பேரவை

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.