இலங்கை அரசாங்கத்தின் தலைமையில் ஐக்கிய நாடுகள் சபை, அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் செஞ்சிலுவை சங்கம் ஆகியன வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளோரிற்கு தேவையான தங்குமிடம், உணவு, குடிநீர்,சுகாதாரம், கல்வி போன்ற தேவைகளை நிறைவேற்றி வருவதாக ஐ.நா பிரதிநிதியும், மனிதாபிமான விடயங்களுக்கான இணைப்பாளருமான நீல் பூனே தெரிவித்தார்.
கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இலங்கையின் மனிதாபிமான நிலவரம் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று இடம்பெற்றது.இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
விடுதலைபுலிகளிற்கும் இராணுவத்திற்கும் முல்லைத்தீவு பகுத்யில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதல்களில் 200,000 மக்கள் 14 சதுரகிலோமீற்றர் பரப்பிற்குள் முடக்கப்பட்டனர்.இதனையடுத்து சில மாதங்களில் அம்மக்களிற்கு பாதுகாப்பு பிரச்சினை காணப்பட்டதுடன் உணவு , மருந்து , குடிநீர் பற்றாக்குறை நிலவியது.
அம்மக்களிற்கான உணவும், நீரும் சர்வதேச செஞ்சிலுவை சங்க கப்பல் மூலம் விநியோகிக்கப்பட்டாலும்,அடுத்த சில தினங்களில் மோதல்கள் உக்கிரமடைந்தமையால் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கப்பல் செல்வதும் உறுதியற்ற நிலையில் காணப்பட்டது. இந்நிலை தொடர்ந்தமையால் மார்ச் மாதமளவில் மோதல் தவிர்ப்பு வலயத்தில் இருந்து மக்கள வெளியேற ஆரம்பித்தனர்.
ஏப்ரல் 20 ஆம் திகதி பாதுகாப்பு படையினர் விடுதலை புலிகளிடமிருந்து 120,000 மக்களுடன் காணப்பட்ட மிகுதி நிலப்பரப்பையும் மீட்கும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தனர்.இதன் போது 70,000 மக்கள் இங்கிருந்து வெளியேறி இவருட ஆரம்பத்தில் அப்பகுதியிலிருந்து வெளியேறியவர்களுடன் இணைந்துகொண்டனர்.
மே மாத முற்பகுதியில் அதிகளவு மக்கள் மோதல் தவிர்ப்பு வலயத்திலிருந்து வெளியேறினர்.90,000 பேர் அடங்கிய இறுதிக் குழுவினரும் மோதல் தவிர்ப்பு வலயத்திலிருந்து வெளியேறி வவுனியா வந்தடைந்தனர்.இத்னையடுத்து மேமாதம் 18 ஆம் திகதி நாடுமுழுவது விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 290,000 மக்கள் அரச கட்டுப்பாட்டிலுள்ள நிவாரண கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களுள் 269,417 பேர் வவுனியாவிலும், 6,697 பேர் திருகோணமலையிலும், 11,086 பேர் யாழ்ப்பாணத்திலும், 398 பேர் மன்னாரிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.மோதல்களின் போது காயம்டைந்த 1,500 பேரும், அவர்களது உறவினர்களும் வெவ்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 10,000 விடுதலை புலி போராளிகள் பிரித்தறியப்பட்டு புனர்வாழ்பு நிலையங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா மனிதாபிமான விவகாரங்களிற்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வல்யங்களில் இருந்து மிக கடினமான பாதைகளில் பயணித்து வவுனியா வந்துள்ள மக்கள் நிவாரண கிராமங்களில் மிகநெருக்கமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இலங்கை அரசாங்கத்தின் தலைமையில் ஐ.நா, அரசசார்பற்ற நிறுவனங்கள், செஞ்சிலுவை சங்கம் போன்றன இம்மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகின்றன.
எனினும் மேலதிகமான நில ஒதுகீடு, துரிதமான விநியோகம்,மேலதிகமான உள்ளடக்கம், அடிப்படை உட்கட்டமைப்பு, வடிகாலமைப்பு , நீர் விநியாகம் போன்றவற்றிறை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு போன்ற சவால்களிற்கு முகம் கொடுக்கவும் வேண்டியுள்ளது . இடம்பெயர்ந்த மக்களின் சுதந்திரமான நடமாட்டம்,மற்றும் பிரிந்த குடும்பங்களை மீள ஒன்று சேர்த்தல் என்பன முக்கிய விடயங்களாக உள்ளன.
இவ்வருட இறுதிக்குள் இடம்பெயர்ந்த இம்மக்களை தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த இலங்கை அரசாங்கம் எண்ணியுள்ளது. இதற்கு அப்பகுதியில் மிதிவெடியகற்றும் பணிகள் உட்பட பல அம்சங்கள் அங்கு நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது.தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறும் மக்களிர்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு, தங்குமிடங்கள், விவசாயம் போன்ற வாழ்வாதாரத்தேவைகள் பூர்தி செய்யப்பட வேண்டியது அவசியம் என ஐ.நா மனிதாபிமான விவகாரங்களிற்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment