யாழ்க்குடாநாட்டிலுள்ள முகாம்களில் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து தங்கியுள்ளவர்களில் புனர்வாழ்வு என்ற பெயரில் வடிகட்டல்கள் தொடர்கின்றன. தற்போது மிருசுவிலிலுள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் இருந்து 67க்கும் அதிகமான பெண்கள் இவ்வாறு புனர்வாழ்வுக்கென படை உயர் அதிகாரிகளின் பிரசின்னத்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்த நடவடிக்கைகளின் போது படையினரால் கொண்டு செல்லப்பட்ட பேரூந்துகளில் ஏற யுவதிகள் மறுத்ததனையடுத்து பலாத்காரம் பிரயோகிக்கப்பட்டு அவர்கள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது தெல்லிப்பளை உயர் பாதுகாப்பு வலய ராணுவ கட்டுப்பாட்டிலுள்ள புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை அண்மையில் குறித்த மிருசுவில் ரோமன் கத்தோலிக்க முகாமிலிருந்து 82 இளைஞர்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவ்வாண்டு எப்ரல் 26ம் திகதி பெருமெடுப்பில் மக்கள் செல்வதற்கு முன்னதாக குடாநாட்டிலுள்ள அனைத்து முகாம்களில் இருந்தும் 76க்கும் அதிகமான இளைஞர்கள் கொண்டு செல்லப்பட்டிருந்தனர். எனினும் அரச அதிபர் இவர்கள் சுய விருப்பத்தின் பெயரிலேயே தெல்லிப்பளை முகாமிற்கு சென்றதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே தற்போது யுவதிகளும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். எனினும் ஏனைய சில முகாம்களில் இருந்தும் இதேபோன்று யுவதிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் எனினும் அவர்களது குடும்பத்தவர்களது கடும் எதிர்ப்புக் காரணமாக அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகின. எனினும் கொண்டு செல்லப்பட்டதை உறுதிப்படுத்திய தரப்புகள் இவர்கள் மீண்டும் விடுவிக்கப்பட்டதான தகவலை வழங்கவில்லை. குறிப்பாக அனைத்து முகாம்களிலும் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் இளைஞர் யுவதிகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் இவர்களும் எந்நேரமும் தெல்லிப்பளை புனர்வாழ்வு முகாமிற்கு கொண்டு செல்லப்படலாம் எனவும் எச்சரிக்கப்படுகின்றது.
குறித்த தெல்லிப்பளை புனர்வாழ்வு முகாம் பொதுமக்களுக்குச் சொந்தமான சில வீடுகளிலேயே இயங்கி வருவதாகவும் இதனால் அங்கு பாரிய புனர்வாழ்வு முகாம் ஒன்றை அமைக்கும் பணியில் படையினர் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே அந்த முகாம் புனரமைக்கப்பட்ட பின்னர் ஏனைய முகாம்களில் இருந்தும் இளைஞர் யுவதிகளையும் புனர்வாழ்வு நடவடிக்கைகக்கு கொண்டு செல்ல முடிவாகியுள்ளது. ஏற்கனவே இவ்வாறான பிந்தனுவௌ முகாமிலேயே சிங்களக் காடையர்களால் 25க்கும் அதிகமான இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment