சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அடுத்த வாரம் இந்தியாவிற்கு பயணமொன்றை மேற்கொள்வாரென எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இந்திய அரசுடன் பேச்சுகளை நடத்துவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அடுத்த வாரம் புதுடில்லி வருவாரெனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
பிரச்சினை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கான புனர்வாழ்வுப் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்களுக்காக புனர்வாழ்வுப் பணிகளை மேற்கொள்வது மிகப் பெரும் விடயமென்றும் கிருஷ்ணா தெரிவித்தார்.
அண்மையில் இலங்கைக்கு பயணம் செய்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்த போது அவர்களுக்கு மகிந்த ராஜபக்ச சில முக்கிய உறுதிமொழிகளை வழங்கியதாகவும் கிருஷ்ணா தெரிவித்தார்.
இதேவேளை, மகிந்தவின் இந்தியப் பயணத்திற்குப் பின்னர் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. அகதி முகாம்களில் நாடு திரும்ப விரும்புபவர்களின் விபரங்கள் காவல்துறையினரால் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment