சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை நாட்டுக்குத் திருப்பியனுப்ப சுவிட்ஸர்லாந்து நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை தீர்மானித்துள்ளது.
இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்து புகலிடம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை நாட்டுக்கு அனுப்புவதற்கு ஆதரவாக கடந்த வார ஆரம்பத்தில் சுவிட்ஸர்லாந்து நாடாளுமன்றத்தின் செனட் வாக்களித்தது. இந்நிலையில் பிரதிநிதிகள் சபையும் மேற்படி தீர்மானத்தை ஆதரித்துள்ளது.
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கப் படைகளுக்குமிடையில் நடைபெற்ற மோதல்கள் முடிவடைந்திருக்கும் நிலையிலேயே சுவிட்ஸர்லாந்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகளுக்குத் திருப்பி அனுப்பாமல் தடுத்து வைப்பது பிழையான கருத்தை வெளிக்காட்டிவிடும் என சுவிட்ஸர்லாந்தின் நீதி அமைச்சர் எவிலின் விட்மன் ஷலம்ப் கூறியுள்ளார்.
மே மாத நடுப்பகுதியில் மாத்திரம் புகலிடம் கோரி புதிதாக 662 விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாக அவர் கூறினார். இதனைக் கருத்தில்கொண்டு குடிவரவு அதிகாரிகள் இந்த விண்ணப்பங்களை மிகவும் அவதானமாகப் பரிசீலித்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களில் நான்கில் ஒரு பங்கு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வதற்கான காரணங்களைக் கொண்டிருப்பதில்லை என குறிப்பிட்ட அவர், எனினும் இலங்கையில் பிரச்சினையுள்ள வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் யாரும் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள் என கூறினார்.
நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகார குழுவின் தலைவர் ஹான்ஸ் ஜர்க் பெஹ்ர் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் யுத்தம் முடிவுற்றாலும் திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் பழிவாங்கும் வகையிலான தாக்குதலுக்கும் சிலவேளை படுகொலை அபாயத்தையும் எதிர்நோக்குவதாக கூறியுள்ளார்.
No comments:
Post a Comment