இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு அளிப்பதற்கு உரிய சட்ட திருத்தம் செய்யப்படும் என்று இலங்கை அதிபர் ராஜபட்ச தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்புத் தூதர்களாக இலங்கை சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர் மேனனிடம் அவர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர் மேனனை இலங்கைக்கு அனுப்பிவைத்தார். இலங்கை புறப்படும் முன்பாக, தமிழக முதல்வர் கருணாநிதியை தில்லியில் எம்.கே. நாராயணன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
புதன்கிழமை மாலை இலங்கைக்கு வந்த அவர்கள், வியாழக்கிழமை காலை அதிபர் ராஜபட்சவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
தமிழீழப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்று அதிபரைச் சந்தித்தபிறகு வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கெதிரான போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இலங்கையை சீரமைப்பு செய்வது மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்வது குறித்து அப்போது பேசியதாகத் தெரிகிறது.
இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் முயற்சியில் இலங்கை அரசுக்குத் தேவையான உதவிகளை இந்தியா செய்ய தயாராக உள்ளது. அதேசமயம் தமிழர் பிரச்னைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண வேண்டும் என இந்திய தூதர்கள் அதிபர் ராஜபட்சவிடம் எடுத்துக் கூறியதாகக் கூறப்படுகிறது.
புலம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வுக்காக ரூ. 500 கோடியை அளிக்க இந்தியா தயாராக உள்ளது. ஏற்கெனவே ரூ. 100 கோடி மதிப்பிலான உதவிப் பொருள்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியதோடு தமிழக அரசு ரூ. 25 கோடி மதிப்பிலான உதவிப் பொருள்கள் அனுப்பியதையும் சுட்டிக் காட்டினர்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்.கே. நாராயணன், இன மோதலால் இவ்வளவு காலம் பிளவுபட்டிருந்த இலங்கையில் 1987-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதிகார பகிர்வு அளிக்க அதிபர் முன்வந்துள்ளதாக தெரிவித்தார்.
அதிபருடனான பேச்சுவார்த்தை இந்திய - இலங்கை அமைதி ஒப்பந்தத்தை ஒட்டியே அமைந்திருந்தது. ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தன அமைதி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள 13-வது சட்ட விதியை மட்டுமின்றி பல்வேறு சலுகைகளையும் அளிக்க முன்வந்ததாக நாராயணன் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக 180 நாள் செயல் திட்டம் ஒன்றை இலங்கை அரசு தயாரித்துள்ளது. இதன்படி புலம் பெயர்ந்த தமிழர்களை அவர்கள் வசித்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
விரைவிலேயே நிவாரண முகாம்கள் கலைக்கப்பட்டு அங்குள்ள மக்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்ப நடவடிக்கை எடுப்பதாக அதிபர் உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.
தில்லி திரும்பும் முன் அதிபர் ராஜபட்சவுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியிடம்இ நாராயணன் விளக்குவார் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment