யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு தற்காலிக பாதுகாப்பு விசாவை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்க வேண்டுமென அந்நாட்டு எதிர்க்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து அகதி முகாம்களில் உள்ளனர். அவர்கள் மிகவும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக உதவி வழங்கும் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக கவலைகொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசும் கூறியுள்ளது. ஆனால், தற்போது நடைமுறையிலுள்ள அகதிகளுக்கான நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சென்று அவுஸ்திரேலியாவில் தமிழர்களுக்கு புகலிடம் வழங்கும் ஏதாவது திட்டம் இருக்கின்றதா என்பது தொடர்பாக தெரிவிக்க இதுவரை அவுஸ்திரேலிய அரசாங்கம் மறுத்துள்ளது.
பால்கன், கிழக்கு திமோர் நெருக்கடிகளின் போது மேற்கொண்டிருந்தமை போன்று தமிழர்களை தற்காலிகமாக பாதுகாக்க அவுஸ்திரேலியா முன்வருவது தொடர்பாக பரிசீலனை செய்ய வேண்டும் என்று எதிரணி குடிவரவுத்துறை பேச்சாளர் சர்மன் ஸ்ரோன் "த வேல்ட் டுடே' க்கு கூறியுள்ளார்.
நாங்கள் அரசாங்கத்தில் இருந்தபோது 1999 மேயில் பால்கன் யுத்த நெருக்கடி தோன்றிய சமயம், 4 ஆயிரம் கொசோவோக்களை பாதுகாப்பு புகலிட விசாக்களை வழங்கி அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு வந்தோம். இந்த அரசுக்கு பல தேர்வுகள் உள்ளன. அவை குறித்து அவர்கள் பேசுவதோ சிந்திப்பதோ இல்லை. இவை தொடர்பான ஏற்பாடுகள் அவுஸ்திரேலியாவின் சட்டத்தில் உள்ளன என்றும் அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
1958 ஆம் ஆண்டு குடிவரவு சட்டத்தில் "பாதுகாப்பு புகலிட விசா' ஏற்பாடு இருப்பதாக அவர் தெரிவித்தார். சொந்த நாட்டில் பிரச்சினை தீரும் வரை அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கு இந்த விசா வழிசெய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஏனைய நாடுகளிலிருந்து வந்த குடியேற்றவாசிகளை போன்றே தமிழர்களும் அவுஸ்திரேலிய சமூகத்துடன் ஒருங்கிணைந்து விட்டனர். உலகிலுள்ள மிகவும் வெற்றிகரமான பல கலாசார மக்கள் வாழும் நாடுகளில் எமது நாடும் ஒன்று என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment