வன்னியிலிருந்து இடம் பெயர்ந்துள்ள மக்களை துரிதகதியில் அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியேற்றி இயல்பு நிலையை உருவாக்கவேண்டும், இனநெருக்கடித் தீர்வுக்கான சமஷ்டி அடிப்படையிலான தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படவேண்டும், இராணுவ முற்றுகையிலிருந்து வடக்கு, கிழக்கு பிரதேசங்களை மீட்க வேண்டும்,
இதற்கான நடவடிக்கைகளை சமாந்தரமாக முன்னெடுக்க இந்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோருடன் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற சந்திப்பின் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனை வலியுறுத்திக் கூறியுள்ளது.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் உட்பட பல உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பின்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பாக விளக்கிக் கூறுகையில் தெரிவித்துள்ளதாவது;
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், சமஷ்டி அடிப்படையிலான நிரந்தரத் தீர்வுத் திட்டம், வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை வாபஸ் பெறுவது போன்ற நடவடிக்கைகள் சமாந்தரமாக முன்னெடுக்கப்படவேண்டும். அதுவே அமைதியான வாழ்நிலைக்கு வழிவகுக்கும்.
இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலையால் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த சில மாதங்களில் கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள். படுகாயமடைந்த மேலும் ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களின் நிலைமை என்னவென்று தெரியாத நிலையிலுள்ளது.
படுகாயமடைந்த நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இடம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் உரிய சிகிச்சை வசதியின்றி சிரமத்திற்குள்ளாக்கப்பட்ட நிலையிலுள்ளனர்.
இடம்பெயர்ந்து வந்துள்ள இலட்சக்கணக்கான மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே மீள்குடியேற்றம் துரிதகதியில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
மக்கள் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் அப்பகுதிக்குச் சுதந்திரமாகச் சென்று உண்மை நிலைவரங்களை அறிவதற்கு இலங்கை அரசு அனுமதியளிக்க வேண்டும். அதற்கான அழுத்தங்களை இந்தியா வலியுறுத்திக் கூறவேண்டும்.
சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றே இன்றைய நெருக்கடி நிலைமைக்குரிய தீர்வாக அமையும். இதற்கான அழுத்தங்களை இந்தியா இலங்கை அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இச்சந்திப்பின் போது வலியுறுத்திக் கோரியுள்ளது.
இதற்குப் பதிலளித்த இந்திய அரசின் உயரதிகாரிகள், 180 நாட்களுக்குள் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியேற்ற நடவடிக்கையெடுப்பதாக இலங்கை அரசு எம்மிடம் உறுதியளித்துள்ளது.
மீள் குடியேற்றத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய அரசு வழங்கும். அத்துடன், இலங்கையில் அமைதியான சூழலை உருவாக்கவும் நடவடிக்கையெடுக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களை இது தொடர்பாகக் கலந்துரையாடுவதற்குப் புதுடில்லிக்கு வருமாறும் இச்சந்திப்பின் போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment