Sunday, May 31, 2009

வன்னியில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஐ.நா. மறைத்தது: "லீ மாண்ட்" (பிரெஞ்சு நாளிதழ்) தகவல்

இலங்கையில் பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்கா இராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை நன்கு அறிந்திருந்தும் அதனை ஐ.நா. அலுவலகம் உலகிற்கு தெரியப்படுத்தாமல் மறைத்தது என்று லீ மாண்ட் என்ற பிரெஞ்ச் நாளிதழ் கூறியுள்ளது.

லீ மாண்ட் நாளிதழி்ல் பிலிப் போலோபியான் என்ற இதழியலாளர் எழுதிய கட்டுரை, பிரான்ஸ் 24 என்ற தளத்தில் ஆங்கிலத்தில் மொழி ஆக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

மே 18ஆம் தேதி சிறிலங்கா இராணுவம் நடத்தி முடித்த கொடூர படுகொலைக்கு முன்னரே அங்கு 20,000 பேர் கொல்லப்பட்டனர் என்பது தெரிந்தும் அதனை வெளியிடாமல் மறைத்துள்ளது ஐ.நா. என்று அந்தக் கட்டுரையில் போலோபியான் கூறியுள்ளார்.

மே 15ஆம் தேதி வரை அங்கு கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கையை 7,700 என்று ஐ.நா. குறித்து வைத்திருந்தது என்றும், அதுவே வெளியே கசிந்த அதிகாரப்பூர்வமான தகவல் என்றும் கூறியுள்ள போலோபியான், மற்ற எந்த ஒரு சர்வதேச அமைப்பையும் விட, அங்கு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை என்ன என்பதை கொழும்புவில் உள்ள ஐ.நா. அலுவலகம் தெளிவாக கணக்கிட்டு வைத்திருந்தது என்று கூறியுள்ளார்.

ஆனால் உண்மையான தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டால், அதன் காரணமாக தங்கள் தூதரையும், அலுவலகத்தையும் வெளியேற்றி விடுவார்கள் என்பதால் அந்த உண்மையை வெளியே கூறாமல் ஐ.நா.மறைத்து விட்டதாக அதன் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களே தனக்கு தெரிவித்தாக போலோபியான் கூறியுள்ளார்.

இதற்கு காரணம் ஐ.நா.பொதுச் செயலரின் தலைமை அலுவலராக உள்ள விஜய் நம்பியார் என்று போலோபியான் கூறியுள்ளார். ஐ.நா.வின் கொழும்பு தூதரிடம், “இதனை நாம் பெரிதுபடுத்தக் கூடாது” என்றும், “இங்கே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால் சிறிலங்கா அரசோடு ஒத்துப் போக வேண்டும்" என்று விஜய் நம்பியார் கூறியதாக ஐ.நா. அலுவலர்கள் தன்னிடம் தெரிவித்ததாக போலோபியான் கூறியுள்ளார்.

இது மட்டுமின்றி, பாதுகாப்பு வலயப் பகுதியின் மீது சிறிலங்கா இராணுவம் ஒரு பெரும் தாக்குதல் நடத்தப்போகிறது என்றும் ஐ.நா. கொழும்பு அலுவலகத்திற்கு முன்னரே தெரியும் என்றும், அதுகுறித்து தாங்கள் அபாய மணி அடித்தும் ஒருவரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை என்றும் அவர்கள் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

எந்த அளவிற்கு கொழும்பு ஐ.நா.அலுவலகம் சிறிலங்கா அரசின் ஊதுகுழலாக செயல்பட்டது என்பதற்கு உதாரணமாக, ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர் ஆணையர் கூறியதை போலோபியான் சுட்டிக் காட்டியுள்ளார்.

போரில் வெற்றி பெற்றுவிட்டதாக சிறிலங்கா இராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும், அப்பகுதியில் அப்பாவி மக்கள் யாரும் இல்லை என்று ஐ.நா.வின் அகதிகளுக்கான தூதர் அமீன் அவாத் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.

ஆனால், மறுநாள் இறுதிப் போர் நடந்த பகுதியில் இருந்து 20,000 அப்பாவி மக்கள் சிறிலங்கா இராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் காயமுற்ற நிலையில் அங்கிருந்து வந்தனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ள போலோபியான், ஐ.நா.அகதிகள் தூதர் அங்கு ஒருவரும் இல்லை என்று கூறியது, எல்லா இடங்களிலும் குண்டுகளை வீசி அங்கிருந்த மக்கள் அனைவரையும் அழிக்க அளித்த அனுமதியே என்று கூறியுள்ளார்.

தமிழர்களை இந்த அளவி்ற்கு கொன்று குவிப்பதற்கு ஐ.நா. அலுவலகங்களும் அதன் துணைப் பொதுச் செயலர் நிலையில் இருந்த விஜய் நம்பியாருமே காரணம் என்று கூறியுள்ள அந்த இதழியலாளர், ஐ.நா.வின் தலைமை அதிகாரியாக விஜய் நம்பியார் இருக்கிறார், ஆனால் அவருடைய சகோதரர் சதீஷ் நம்பியார்தான் சிறிலங்கா இராணுவத்திற்கு ஊதியம் பெறும் ஆலோசகராக உள்ளார் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

லீ மாண்ட்டின் இந்த குற்றச்சாற்றை ஐ.நா. மறுத்துள்ளது. இலங்கை‌யி‌ல் நடந்து வந்த போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தாங்கள் வெளியிடும் தகவல்களை விட உண்மையில் கொல்லப்பட்டவர்களின் உண்மை எண்ணிக்கை எதிர்பாராத அளவிற்கு அதிகமாக இருக்கும் என்பதைத் தெரிவித்துள்ளோம் என்று ஐ.நா.பேச்சாளர் எலிசபெத் பய்ர்ஸ் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள போலோபியான், களத்தில் இருந்த தாங்கள் சேகரித்து தகவல்களின் அடிப்படையிலான எண்ணிக்கையை தாங்கள் ஐ.நா. அலுவலகத்திற்கு அவ்வப்போது தெரியப்படுத்தியுள்ளோம் என்றும், அது மற்ற போர்களப் பகுதிகளில் சேகரிக்கப்பட்டதை விட மிகத் துல்லியமானது என்றும் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.