தமிழ் மக்களுக்கு குறிப்பிடத்தக்க சுயாட்சி வழங்கப்படாவிட்டால், அவர்களின் அபிலாஷைகளுக்கான போராட்டம் வேறு வடிவில் தொடரலாம் என்று நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
பிரபாகரனை அதிகம் சந்தித்த தமிழர் அல்லாத ஒருவர் நானாகத்தான் இருக்கமுடியும்.
அவர் அமைதியானவர். கூச்ச சுபாவம் மிக்கவர். தனது கடினமான உணர்வுகளை வெளிப்படுத்தாதவர். அவர் மிக நீண்டகாலம் வெற்றிகரமான வலுவான இராணுவத் தலைவராகத் திகழ்ந்தவர்.
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தினால் மாத்திரமே விடுதலைப் புலிகளை அரசியல் பாதையில் இட்டுச் சென்றிருக்க முடியும்.
அன்ரன் பாலசிங்கத்தின் மறைவிற்குப் பின்னர், பிரபாகரன் இராணுவ விடயங்களுக்கு அப்பால் சிந்திப்பதற்கான தனது திறமையை இழந்துவிட்டார்.
அன்ரன் பாலசிங்கத்தினால் மாத்திரமே பிரபாகரனுடன் பேசி அவரை வேறு பாதையில் பயணிக்கச் செய்ய முடியும். அவர் இல்லாததால் அவர்கள் அந்தத் திறமையை இழந்தனர்.
கடந்த சில வருடங்களில் விடுதலைப் புலிகளிடமிருந்து அரசியல் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு ஒரு வேண்டுகோளும் வரவில்லை.
விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தின் மரணம் காரணமாக சர்வதேச சமூகம் இலங்கையை மறந்து விடக்கூடாது.
சர்வதேச சமூகம் தொடர்ந்தும் இலங்கை குறித்து கவலை செலுத்துவது முக்கியம்.
அரசிற்கு சில விடங்களைத் தெளிவாகத் தெரிவிக்கவேண்டும். அல்லது பிரச்சினைகள் மறுபடியும் உருவாகலாம்.
மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் நலன் குறித்து உலகம் கவனம் செலுத்தவேண்டும்.
நோர்வேயின் சமாதான முயற்சியை பெரும்பாலான இலங்கையர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அரசின் தலைவர்கள் அதனை ஏற்றுக்கொண்டிருந்தால், பெரும்பான்மை சமூகத்தவர்களும் இதனை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.
பெருமளவு தமிழ் சிங்கள இளைஞர்கள் பலியானமைக்கும் தேவையற்ற இரத்தக்களரி ஏற்பட்டமைக்கும் கவலையடைகிறேன் என்றார்.
No comments:
Post a Comment