வன்னியில் சிறிலங்கா படையினர் நடத்திய பாரிய மனிதப் பேரவலத்தினை நினைவுகூர்ந்து புலம்பெயர்ந்து தமிழர்கள் அதிகமாக வாழும் சுவிற்சர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், சுவீடன், நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளில் நேற்று துயர நாள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. |
சுவிற்சர்லாந்தில்... 'இறுதிக் கட்டத் தாக்குதல்' என சிங்கள அரசினால் வர்ணிக்கப்பட்ட கொலைகாரத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவு கூரும் வணக்க நிகழ்வு சுவிற்சர்லாந்தின் சூரிச் மாநகரில் உள்ள ஹெல்விற்றியா பிளற்சில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:00 மணி தொடக்கம் மாலை 6:00 மணி வரை நடைபெற்றது. அகவணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்வில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான சுவிஸ் வாழ் தமிழர்கள் கலந்து கொண்டு கரங்களில் மலர்களையும், மெழுகுவர்த்திகளையும் ஏந்திய வண்ணம் உணர்வுபூர்வமாக படுகொலை செய்யப்பட்ட தமது தாயக உறவுகளுக்காக வணக்கத்தினை செலுத்தினர். சுவிஸ் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் பேரவையின் இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் தலைமையேற்றார். பேரவையின் ஆலோசகர் வன்னித்தம்பி தங்கரத்தினம் ஈகச்சுடர் ஏற்றினார். செல்வி. நுதாயினி தர்மலிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார். ஊடகவியலாளர் கனகரவி, பிரான்சிஸ் அல்பேர்ட், செல்வி. ஜெனிசியா ஜெயம் ஆகியோர் உரையாற்றினர். 1958 இல் தமிழர் படுகொலையின் தொடக்க நாள் 50 ஆண்டுகளின் பின்னரும், 2009 இலும் தமிழர்களின் கரிநாளாக அமைந்திருந்தது. டென்மார்க்கில்... டென்மார்க் தலைநகரில் நடத்தப்பட்ட போராட்டம் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் நடைபெற்றது. இதில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டு தமது உரிமைக் குரல்களை எழுப்பினர். போராட்டத்தில் டெனிஸ் குடிமக்களும் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்ததுடன், டெனிஸ் மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த இருவர் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்த தமது கருத்துக்களை டெனிஸ் மக்களுக்குத் தெரியப்படுத்தினர். தமிழர் அமைப்புக்களாலும் தமிழ் மாணவர் அமைப்புக்களாலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த போராட்டமானது டென்மார்க்கில் நடைபெற்ற முதலாவது நிகழ்வாகவும் அமைந்திருந்தது. நிகழ்வில் டேசியா வாழ் தமிழ் மாணவர்கள் சமகால வன்னித் தமிழர்களின் அவல வாழ்க்கையை சித்தரித்துக்காட்டும் நிகழ்வினை இசை வடிவத்தில் போராட்டம் நடத்தப்பட்ட இடத்தில் வெளிப்படுத்தினர். நெதர்லாந்தில்... நெதர்லாந்து நாடாளுமன்றம் முன்பாக தமிழ் மக்களால் நேற்று வெள்ளிக்கிழமை துயர நாள் கடைப்பிடிக்கப்பட்டது. அனைத்துலத்தின் ஆசியுடன் சிங்கள அரசு வன்னியில் தமிழ் மக்களை பாரிய இன அழிப்பு செய்து, அங்குள்ள தமிழர்களின் சாம்பல் மேட்டில் இருந்து நேற்று வெற்றி விழா கொண்டாடிய நிலையில் நெதர்லாந்து வாழ் தமிழ்மக்கள் துயர நாள் கடைப்பிடித்தனர். தமிழர்களுக்கு எல்லாம் இது பெரும் துயர நாளாகும். பூமிப்பந்தின் எந்த மூலையில் தமிழன் வாழ்ந்தாலும் நேற்று நடைபெற்ற சிங்களத்தின் வெற்றி விழாவால் நொந்து வெந்திருப்பான். எனவே, ஈழத் தமிழர்களால் இனிமேல் எந்தவிதத்திலும் சேர்ந்து வாழ முடியாத பாசிச சிங்கள அரசை கண்டித்தும் இன அழிப்பில் பலியான அப்பாவிப் பொதுமக்கள், தளபதிகள், போராளிகளை நினைவுகூர்ந்தும் டென்கார்க்கில் உள்ள நாடாளுமன்ற முன்றலில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த துயர நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் நேற்று பிற்பகல் 1:00 மணியளவில் தொடங்கி மாலை 6:00 மணிவரை நடைபெற்றது. இதில் பெரும் திரளான மக்கள கறுப்பு உடை அணிந்தும் கறுப்புக் கொடிகளுடனும் மெழுகுவர்திகளுடனும் பூக்களுடனும் கலந்துகொண்டனர். அகவணக்கத்துடன் தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் சில காட்சிப்படங்கள் வைக்கப்பட்டு மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டும் மலர்வணக்கமும் அனைவராலும் செய்யப்பட்டது. அத்துடன், சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவின் உருவப்பொம்மை செருப்பு மாலைகளுடன் வைக்கப்பட்டு செருப்படி பூசையும் செய்யப்பட்டது. மேலும், காயப்பட்ட பொதுமக்களை சிங்கள இராணுவம் கொடுமைப்படுத்தும் காட்சியும் அங்கு செய்து காண்பிக்கப்பட்டது. அதேநேரம், நெதர்லாந்து நாடாளுமன்றம் முன்பாக 48 ஆவது நாளாகத் தொடரும் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று சனிக்கிழமையும் இடம்பெறுவதோடு இன்றும் துயர நாளாக கடைப்பிடிக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இன்று நடைபெறவுள்ள போராட்டம் பிற்பகல் 2:00 மணிக்கு நடைபெறவுள்ளதால் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டளர்கள் கேட்டுக்கொள்கின்றனர். சுவீடனில்... சிறிலங்கா அரச படைகளின் இன அழிப்புத் தாக்குதலில் இதுவரையில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும் சுவீடன் தலைநகரின் மக்கள் கூடும் பிரதான இடமான செகல்தொர்ய் எனும் இடத்தில் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் பெரும் சோகத்துடன் மெழுகுவர்த்திகள் கைகளில் ஏந்தி படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆன்மா சாந்தியடைவும், அவர்களின் கனவை நனவாக்க உழைப்போம் எனும் உறுதியுடனும் தமது இதயத்து வணக்கத்தினை செலுத்தினர். இந்நிகழ்வில் பலர் கறுப்பு ஆடைகள், கறுப்புக் கொடிகளுடன் தமது துயரத்தை வெளிப்படுத்தினர். சுவீடனில் இயங்கும் குருதிஸ்தான் அமைப்பில் இருந்தும் பலர் வந்து எமது துயரத்தில் கலந்துகொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. நிகழ்வை சுவீடன் முதன்மைத் தொலைக்காட்சி நிறுவனம் பதிவு செய்தது. வணக்க நிகழ்வில் கலந்துகொண்ட மக்களின் உணர்வலைகளையும் அவர்கள் உள்வாங்கினர். பெல்ஜியத்தில்... சிங்களத்தின் இன அழிப்பை கண்டித்து பெல்ஜியத்தில் உள்ள ஜரோப்பிய நாடாளுமன்றம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுடன் நேற்று அங்குள்ள தமிழ் மக்களால் கறுப்பு நாளாகவும் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11:00 மணிக்கு தொடங்கியது. நிகழ்வின் முதலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதையடுத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இதுவரை தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்ய அனைத்து மாவீரர்களுக்காகவும் சிறிலங்கா - இந்திய அரச படைகளினாலும் இரண்டகர்களினாலும் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்காகவும் நாட்டுப்பற்றாளர்களுக்காகவும் அகவணக்கம் செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றுகூடிய அனைத்து மக்களும் கறுப்பு உடைகள் அணிந்து கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் - தாயகப் பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினால் தடை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்மக்கள் அனைவரையும் உடனடியாக ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பெடுப்பதன் மூலம் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் - சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகின்ற இனப் படுகொலையை கண்கூடாக கண்டு கொண்டுள்ள அனைத்துலகமானது இந்த இனப் படுகொலையினை தடுத்து நிறுத்தி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் - இக்கட்டான சூழ்நிலையிலும் தமது மக்களின் நிலைகருதி அனைத்துலகத்தின் அனைத்து வேண்டுகோள்களையும் ஏற்று செயற்பட்ட தமிழர்களின் விடுதலை இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. நோர்வேயின் மோல்டே நகரில்... நோர்வேயின் மோல்டே நகரிலும் துயர நாள் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கலந்துகொண்டு வன்னியில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களையும் களமாடி வீரச்சாவடைந்த மற்றும் சூழ்ச்சியாலும் கொல்லப்பட்ட போராளிகளையும் நினைவு சுமந்து தீபச்சுடர் ஏற்றி வணக்கத்தினை தெரிவித்தனர். |
Saturday, May 23, 2009
புலம்பெயர் நாடுகளில் துயர நாள் கடைப்பிடிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***
எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள்.
இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.
No comments:
Post a Comment