Saturday, May 23, 2009

கொழும்பு சென்றிருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் கண்டியில் மகிந்தவுடன் பேச்சு

ஐக்கிய நாடுகள் சபைக்குச் சொந்தமான சிறப்பு வானூர்தி மூலம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11:30 நிமிடமளவில் கொழும்பைச் சென்றடைந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இன்று காலை கண்டி சென்று அங்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் முக்கியமான பேச்சுக்களை நடத்தவிருக்கின்றார்.

அதன் பின்னர், வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களைச் சென்று பார்வையிடுவதுடன், போர் நடைபெற்ற பகுதிக்கும் நேரில் செல்லவிருக்கின்றார்.

இதனை முன்னிட்டு கொழும்பு, கண்டி மற்றும் வவுனியா நகர்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.

தனது பயணத்தின் போது, விடுதலைப் புலிகள் மீதான போரில் தாங்கள் பெற்றுள்ள வெற்றிக்கான அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற சிறிலங்கா அரசுக்கு இந்த பயணம் உதவக்கூடும் என்பது குறித்து பான் கீ மூன் மிகவும் விழிப்புடன் இருக்கிறார் என்று ஐ.நா.வின் மூத்த அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்த வெற்றியின் ஒரு பகுதியாக தாம் இருக்கப் போவதில்லை என்பதை உறுதி செய்து கொள்ள அவர் முயல்வார் என அவருடன் பயணிக்கும் பிபிசியின் செய்தியாளர் லாரா ட்ரெவ்லீன் கூறுகிறார்.

போரின் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி தற்போது அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கும் முகாம்களில் தங்கியுள்ள சுமார் மூன்று லட்சம் மக்கள், அதிலும் குறிப்பாக பெரும்பாலானவர்கள் தமிழ் மக்கள் என்கிறதன் பின்புலத்தில், அவர்களுக்கு தேவையான மனிதாபிமான தேவைகளில் கவனம் செலுத்துவதுதான் அவரது பயணத்தின் பிரதான நோக்கம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முகாம்கள் இராணுவத்தால் நடத்தப்படக்கூடாது என்று கூறும் ஐ.நா.வின் அதிகாரிகள் அங்குள்ள மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனை தனது பேச்சுக்களின் போது ஐ.நா. செயலாளர் நாயகமும் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

போரில் சிறிலங்கா அரசு வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது சமாதானத்தை வென்றெடுக்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதையும் பான் கீ மூன் அரசுக்கு நினைவூட்ட எண்ணியுள்ளார் எனவும் ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்தன.

நாட்டில் தமிழ் மக்களும் சம பங்காளிகள் என அவர்கள் எண்ணும் வகையில் ஒரு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.