Tuesday, May 19, 2009

அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை சிறிலங்கா முன்னெடுக்க வேண்டும்": அமெரிக்கா, நோர்வே கோரிக்கை

இலங்கையில் உள்ள அனைத்து குடிமக்களினதும் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அரசியல் தீர்வு ஒன்றைக் காணுமாறு சிறிலங்கா அரசாங்கத்தை அமெரிக்கா வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளை போரில் தோற்கடித்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையிலேயே அமெரிக்காவின் இந்த வேண்டுகோள் வெளியிடப்பட்டிருக்கின்றது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளர் இயன் கெலி நேற்று திங்கட்கிழமை வாசிங்கரனில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றியபோதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆனால், அனைத்துலக நாணய நிதியத்தினால் சிறிலங்காவுக்கு 1.9 பில்லியன் ரூபா கடன் உதவி வழங்கப்படுவதை அமெரிக்கா தொடர்ந்தும் எதிர்க்குமா எனக் கேட்கப்பட்டபோது அதற்குப் பதிலளிப்பதற்கு அவர் மறுத்துவிட்டார்.

"சிறிலங்கா அரசாங்கமானது தனது கடந்த காலத்தில் இருந்து ஒரு புதிய பக்கத்துக்குப் பிரவேசித்து ஜனநாயக அடிப்படையில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை இது ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றது" எனவும் தெரிவித்த கெலி, தமிழர்கள் சிங்களவர்கள் மற்றும் ஏனையவர்களுடன் சம்பந்தப்பட்ட வகையில் நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான தருணம் சிறிலங்கா அரசுக்கு வந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

வடபகுதியில் போர் இடம்பெற்ற பகுதிகளில் இருந்து வெளியேறி வந்திருக்கும் சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் மக்களுக்கான அடிப்படை உதவிகளும், தேவைகளும் சிறிலங்கா அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டும் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் வலியுறுத்தியிருக்கின்றார்.

இதேவேளையில் "தமிழர்களின் சுயாட்சிக்கான விருப்பத்தை கொழும்பு புறக்கணித்துவிடக் கூடாது" என நோர்வேயின் அமைச்சரும் சமாதான முயற்சிகளுக்கு அனுசரணையாளராகப் பணிபுரிந்தவருமான எரிக் சொல்ஹெய்ம் சிறிலங்கா அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்.

"மரபு ரீதியான போரில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், சமாதானத்தை கொண்டு வருவதில் அது மிகவும் தொலைவிலேயே இருக்கின்றது" எனவும் சுட்டிக்காட்டியிருக்கும் சொல்ஹெய்ம், இந்த நிலையில்தான் சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களுக்குப் போதுமான சுயாட்சியை வழங்குவதன் மூலம் தன்னுடைய தாராள மனப்பான்மையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

"இதனை அவர்கள் செய்யவில்லை என்றால், தமிழர்களின் விருப்பங்கள் வேறு வடிவங்களை நாடிச் செல்லும் எனவும் குறிப்பிட்ட எரிக் சொல்ஹெய்ம், இது தொடர்பில் நாம் சிறிலங்கா அரசுக்குத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டியுள்ளது. இல்லையெனில் மீண்டும் பிரச்சினை உருவாகும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.