
சோதனை நடைபெறும் இடங்களில் ஐ.நா. பணியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியே வழங்கப்படுவதால் அங்கே மக்களுக்கு என்ன நடக்கின்றது என்பது குறித்து உறுதியாகக் கூற முடியாது என இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பேச்சாளரான கோடன் வைஸ் தெரிவிக்கின்றார்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்கள் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கேட்கப்பட்ட போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
"அநேகமானோர் எந்தவித சிக்கல்களும் இன்றியே சோதனைச் சாவடிகளைக் கடந்து வருகின்றார்கள். சிலர் தாம் விடுதலைப் புலிகள் என ஒப்புக் கொள்கின்றார்கள். இன்னும் சிலர் விடுதலைப் புலிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அவர்கள் மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டு சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்படுவதாகவே நாம் அறிகின்றோம்."
என இது தொடர்பாக தெரிவித்துள்ள அவரிடம் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்துக் கேட்ட போது,
"இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து நாம் அறிந்திருக்கின்றோம். அதற்கு மேல் அது பற்றி எமக்கு எதுவும்தெரியாது. வவுனியா முகாமில் ஏற்கத்தக்க நிலைக்கும் குறைவான எண்ணிக்கையினரே அங்குள்ளனர். மெனிக் பார்ம் - 02 இல் பெண்கள் குளிக்கும் இடங்களில் 30 பெண்களை நியமிக்கப் போவதாக அரசாங்கம் கூறியுள்ளது. இப்படிச் செய்யும் போது இதனை ஒப்பீட்டளவில் தவிர்க்க முடியும்.
இதனைத் தவிர பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்து புகார் செய்வதற்கு ஒரு புகார் மையத்தை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். அது இராணுவ கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு நாம் யோசனை முன் வைத்துள்ளோம். இதன் மூலமே எவ்வித அச்சமுமின்றி பாதிக்கப்பட்டவர்கள் தமது புகார்களைத் தெரிவிக்க முடியும். அரசும் இப்படியான நடைமுறையை அமுல்படுத்த முயற்சிப்பதாக நாம் அறிகின்றோம்.அதே நேரத்தில் இவை எல்லாம் குற்றச்சாட்டுக்கள் தான்.
இம் முகாம்களில் 2 லட்சம் பேர் வரை இருக்கின்றார்கள. இது இலங்கையிலுள்ள நடுத்தர நகரமொன்றின் மக்கள் தொகை. எனவே இது போன்ற நகரத்தில் நடக்கும் குற்றச்சம்பவங்கள் இங்கும் நடக்கலாம் என நாம் எதிர்பார்க்கலாம். நிச்சயமாக பாலியல் புகார்ளை நாம் நியாயப்படுத்தவில்லை.அதே நேரத்தில் மிகப் பெரிய அளவில் பாலியல் துஷ்பிரயோகம் நடைபெற்றதாக எமக்கு ஆதாரங்களும் இல்லை." என இதற்கு பதிலளித்தார் இலங்கைக்கான ஐ.நா.வின் அலுவலக வதிவிடப் பேச்சாளர் கோடன் வைஸ்.
No comments:
Post a Comment