இலங்கையில் முல்லைத்தீவில் வார இறுதியில் பலநூற்றுக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்ட தகவல் என்னைத் திணுக்குற வைத்துள்ளது என்று நேற்றுக் கவலை வெளியிட்டார் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன்.
அத்தோடு இரத்தக்களரி உண்டாக்காமல் இலங்கை அரசு மோதலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், மோதல் பிரதேசத்தில் சிக்குண்டுள்ள பொதுமக்களை (ஐ.நா.மதிப்பீட்டின் பிரகாரம் 50,000 பேர்) வெளியே செல்வதற்கு விடுதலைப்புலிகள் உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்றும் ஐ.நா.செயலாளர் நாயகம் அழுத்தம் கொடுக்கும் தொனியில் காரசாரமாகத் தெரிவித்திருக்கின்றார்.
இரண்டு தரப்புகளும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும். உலகம் இரண்டு தரப்புகளையும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது. அதனை அவர்கள் மறந்துவிடக்கூடாது.
இலங்கையின் வட கடற்கரையின் மிகச் சுருங்கிய ஒரு பிரதேசத்தில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் ஆழ்ந்த கவலையைத் தருகிறது.
எஞ்சியுள்ள மோதல் பிரதேசத்தில் சிக்குண்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் பாதுகாப்பு குறித்து மதிப்புத் தராமல் விடுதலைப் புலிகள் அசட்டுத் துணிவுடன் நடந்து கொள்வது வேதனையைத் தருகிறது.
இராணுவத் தாக்குதல்களை நிறுத்துவதற்கான வழிமுறைகள், விதிமுறைகளை அரசாங்கம் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும்.
விடுதலைப் புலிகளும் சீற்றம் கொள்ளாமல் அவற்றைப் பரிசீலனை செய்யவேண்டும்.
என்று ஐ.நா. பொதுச் செயலாளர் தமது பேச்சாளர் ஊடாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment