வன்னிப் போர் முனையில் இருந்து இடம்பெயர்ந்து வுவுனியா வந்து மக்கள் தங்கியுள்ள இடைதங்கல் முகாம்களில் இருந்தும் வவுனியா நகரில் இருந்தும் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் அரசுடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுக்களால் கடத்தப்பட்டு வருவதாக சிறார் போராளிகள் ஒழிப்பு கூட்டணி என்ற அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது என பி.பி.சி. செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா முகாம்கள் மற்றும் அதனை அடுத்துள்ள பகுதிகளில் இருந்து இவ்வாறு சிறார்கள் பலவந்தமாக அழைத்துச் செல்லப்படுவது தொடர்பாக தமக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைத்திருப்பதாக இந்த அமைப்பு தெரிவித்திருக்கின்றது.
சிறிலங்கா படையினரும் காவல்துறையினரும் பார்த்துக்கொண்டிருக்கவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன எனவும் வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசாங்க ஆதரவு குழுக்கள் இந்த செயல்களில் ஈடுப்பட்டு வருவதாகவும் சிறார் போராளிகள் ஒழிப்பு கூட்டணி என்ற அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் செயற்பட்டு வரும் இந்த ஆயுதக்குழுக்கள் கடத்தப்பட்டவர்களை தங்களது அமைப்பில் சிறார் போராளிகளாக சேர்த்து வருவதாக தமக்கு தகவல் வந்துள்ளதாகவும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி., த.சித்தார்த்தன் தலைமையில் செயற்படும் மற்றொரு துணை இராணுவக் குழுவான புளொட் என்பவற்றுடன் அமைச்சர் முரளிதரன் தலைமையில் செயற்படும் துணை இராணுவக் குழு போன்றவற்றுக்கு வவுனியாவில் இருக்கின்ற இந்த இடைத்தங்கல் தங்குதடையின்றி போய் வருவதற்கான அனுமதியை இராணுவம் வழங்கப்படுகின்றது என்றும் இந்த அமைப்பு கூறியுள்ளது.
இவ்வாறு கடத்தப்படுபவர்கள் மூன்று நோக்கங்களுக்காகக் கொண்டு செல்லப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்று கப்பம் பெறுவதற்காகக் கடத்தப்படுகின்றனர். இரண்டாவதாக விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்தனர் என்பதற்காகக் கடத்தப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.
இதனைவிட தமது அமைப்பில் உருவாகியிருக்கும் ஆள் தட்டுப்பாட்டை நீக்குவதற்காக இவர்கள் குறிப்பிட்ட ஆயுதக்குழுக்களால் கடத்தப்படுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இவ்வாறு கடத்திச் செல்லப்படுபவர்களில் 12 வயதுச் சிறார்கள் கூட இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரவு நேரங்களில் கண்காணிப்பு குறைவாக இருக்கும் நேரங்களிலேயே இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இடைத்தங்கல் முகாம்களில் சென்று உதவுவதற்கு அனைத்துலக நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த முகாம்களில் உள்ள சிறார்களின் பாதுகாப்பு உடனடியாக கவனிக்க வேண்டிய மோசமான நிலையில் இருப்பதாகவும் இந்த அமைப்பு கூறுகின்றது.
இடைத்தங்கல் முகாம்களுக்கு சிறுவர்கள் கொண்டுவரப்படுவதற்கு முன்னர் படையினர் மேற்கொள்ளும் 'வடிகட்டும்' நடவடிக்கைகள் கூட இந்த சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அச்சங்களை ஏற்படுத்துவதாகவும் இந்த அமைப்பு தெரிவித்திருக்கின்றது.
இது குறித்து கருத்து வெளியிட்ட சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, இது போன்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் நன்கு புனையப்பட்ட கதைகள் என்றும் சிறிலங்காவுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக இவ்வாறு கூறப்படுகிறது என்றார்.
மேலும் முகாம்கள் அரசாங்கத்தின் சிறப்பு படையின் மேற்பார்வையில் இருப்பதால் அந்த முகாமுக்குள் யாரும் எளிதாக செல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment