சிறிலங்காவின் அநுராதபுரம் மாவட்டத்தில் குருநாகல் சந்திப் பகுதியில் நீண்டகாலமாக வசித்துவந்த பல தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.
புனித பிரதேச சட்டவிரோத கட்டங்களை அகற்றுதல் என்ற திட்டத்தின் பெயரிலேயே இந்தக் குடும்பங்கள் அனைத்தும் அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளன.
குருநாகல் சந்தியில் நீண்டகாலமாக சிங்கள மக்களுடன் ஐக்கியமாக வாழ்ந்துவந்த 52 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இந்த விதம் பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.
நகர அபிவிருத்தி அதிகார சபையும் தேசிய பெளதீக திட்டவியல் திணைக்களமும் இணைந்தே இவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதனையடுத்து நேற்று புதன்கிழமை அந்தப் பகுதிக்கு எந்தவிதமான முன்னறிவித்தலும் இல்லாமல் வந்த அதிகாரிகள் புல்டோசர்களைப் பயன்படுத்தி இவர்களுடைய வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினர்.
தாம் நீண்டகாலமாக வசித்துவந்த கல் வீடுகளும் காணியும் பறிபோய்விட்ட நிலையில் தமிழ், முஸ்லிம் குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன.
இவர்களுக்கு அனுராதபுரத்தில் மிகவும் ஒதுக்குப்புறமாக உள்ள நீராவியடிப் பகுதியில் சிறிய காணித்துண்டு ஒன்றையும் தலா ஒன்றரை லட்சம் ரூபாவை நட்ட ஈடாக வழங்கவும் அரசாங்கம் முன்வந்திருக்கின்றது.
தமக்குச் சொந்தமான 40 லட்சம் ரூபாவுக்கும் அதிகளவு பெறுமதி உள்ள வீடுகள் தகர்க்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றரை லட்சம் ரூபாவை வைத்துக்கொண்டு தாம் என்ன செய்வது என இவர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
திடீரென வீடுகள் தகர்க்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருப்பதால் என்ன செய்வது எனத் தெரியாது நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இந்தக் குடும்பங்கள் உடனடியாகச் செய்வதற்கு எதுவும் இன்றி மரநிழல்களிலேயே நாட்களைக் கழிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாரிகள் எவரும் தமது பிரச்சினைகளையிட்டு கவனிக்கக்கூட தயாராக இல்லை என இவர்கள் குறிப்பிடுகின்றனர்.
No comments:
Post a Comment