சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு சென்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் சிறப்புப் பிரதிநிதி விஜய் நம்பியார் இன்று வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன், இறுதி மோதல்கள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியையும் உலங்குவானூர்தி ஒன்றில் இருந்து பார்வையிட்டார்.
மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் அந்தப் பகுதியை வானில் இருந்து பார்வையிட்ட முதலாவது வெளிநாட்டுப் பிரதிநிதி நம்பியார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று வியாழக்கிழமை காலை கொழும்பில் இருந்து சிறப்பு உலங்குவானூர்தி மூலம் வவுனியா சென்ற நம்பியார், அங்குள்ள மெனிக் பாமில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களைப் பார்வையிட்டார்.
இடம்பெயர்ந்தோருக்கான நிவாரண நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி, நம்பியாரை வரவேற்றதுடன் முகாமின் நிலைமைகள் தொடர்பாகவும் அவருக்கு விளக்கிக் கூறினார்.
மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாத் பதியுதீனும் அங்கு சென்றிருந்த அதேவேளையில் நம்பியாருக்கு முகாம் நிலைமைகளை விளக்கியதாக அரசாங்கச் செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment