விடுதலைப்புலிகளின் வான்புலிகளின் விமானங்கள்மூலம் நாம் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தோம் என்பது உண்மையே. அவர்களிடம் இன்னும் வலிமையான விமானங்கள் இருந்திருந்தால் நாம் பாரிய சிக்கல்களை சந்தித்திருக்க வேண்டியிருந்திருக்கும் என சிறி லங்கா விமானப்படைத்தளபதி எயார் சீவ் மார்ஸல் ரொஸான் குணதிலக தெரிவித்தார்.
சிறி லங்காவின் ஐ.ரி.என் தொலைக்காட்சிக்கு அவர் வழங்கியிருந்த செவ்வியில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகளிடம் ஆரம்பத்தில் விமான ஓடுபாதைகள் இருப்பதை நாம் அவதானித்தோம்.
அதன் பின்னரே உடனடியாக வான்பாதுகாப்பு வலையமொன்றை அமைக்க நாம் முயற்சிகளை மேற்கொண்டோம். உண்மையில் அவ்வாறான வலையமைப்பினை உருவாக்க குறைந்தது ஐந்து வருடங்கள் தேவைப்படும். அத்துடன் அதில் பயன்படுத்தப்படும் ராடர் கருவிகளை இயக்க அதில் விற்பன்னர்களான அதிகாரிகள் தேவை. இந்த வசதிகள் எங்களிடம் இல்லை.
இருப்பினும் எமது அவசர தேவைகருதி மிகக்குறுகிய காலத்தினுள்ளேயே அவற்றை அமைத்துவிட்டோம். விடுதலைப்புலிகள் வசமிருந்த விமானங்கள் அளவில் மிகச்சிறியவை. அவை இரவு வேளைகளில் பயணிக்கும். எமது ராடர் கருவிகளிடம் அவை அகப்படுவதும் கிடையாது. விமானப்படையினர் வசமிருந்த விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் அவற்றை அழிக்கவும் முடியாது.
இதனால் இந்த விமானங்கள் மூலம் நாம் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கினோம். இருப்பினும் இறுதியில் அவற்றையும் நாம் சுட்டு விழ்தினோம். அவர்களினது விமானங்கள் மூலம் நாம் பெரும் பிரச்சினைகளைச் சந்தித்திருந்தோம் என்பது உண்மையே. ஆனால் நாம் மட்டும் அன்றி உலகநாடுகள் அத்தனையும் பெரும் படிப்பினையினை பெற்றிருப்பார்கள்.
வான்புலிகளிடம் 5 இலகுரக விமானங்கள் இருந்தன. இவை அனைத்தையும் எமது விமானப்படையினர் அழித்தனர். மேலும் மூன்று விமானங்களை விடுதலைப்புலிகள் கொள்முதல் செய்து வன்னிக்கு கொண்டுசெல்ல முற்பட்டபோது அவற்றை எமது கடற்படையினர் அழித்துள்ளனர். அந்த அமைப்பினரிடம் இருந்த விமானங்கள் அனைத்தும் செக்கோஸிலாவியாவில் தயாரிக்கப்பட்டவையாகும்.
இவை மூன்றாம் தரப்பினரூடாகவே கொள்வனவு செய்யப்பட்டு விடுதலைப்புலிகளிடம் கொடுக்கப்படடுள்ளது. விடுதலைப்புலிகள் இவ்வாறு இலகுரக விமானங்களைப் பெற்கொண்டார்கள். விமானிகளுக்கான பயிற்சிகளை சர்வதேச ரீதியில் பெற்றுக்கொண்டார்கள். அத்துடன் அவர்களது முயற்சிகள் நின்றுவிடவில்லை. அளவில் பெரிய புதிய தொழிநுட்பத்துடன் இயங்கக்கூடிய யுத்த விமானங்களைக்கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளை அந்த இயகத்தினர் தொடர்ந்தும் முன்னெடுத்தனர்.
எனினும் இவை பாதுகாப்பு தரப்பினராலும், சிறி லங்கா வெளிவிவகார தரப்பினராலும் முறியடிக்கப்பட்டது. உண்மையில் விடுதலைப்புலிகள் அவ்வாறான விமானங்களைப் பெற்றிருந்தார்களேயானால் இதுவரை சந்தித்த பிரச்சினைகளையும்விட அதிகமான பிரச்சினைகளை நாம் எதிர்நோக்கியிருப்போம் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment