Friday, May 29, 2009

ஐரோப்பிய மக்களின் வரிப்பணம் சிறிலங்காவை சென்றடைவதை எதிர்க்கின்றேன்: ஐரோப்பிய நாடாளுமன்ற வேட்பாளர் ஜனனி

ஐரோப்பாவில் உள்ள மக்களின் வரிப்பணம் அனைத்துலக நாணய நிதியத்தின் ஊடாக சிறிலங்கா போன்ற தடை செய்யப்பட்ட நாடுகளுக்கு சென்றடைவதை எதிர்க்கப் போவதாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனனி ஜனநாயகம் தெரிவித்திருக்கின்றார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 4 ஆம் நாள் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் லண்டன் பெரும்பாக பிரதேசத்தில், இன அழிப்புக்கு எதிரான தமிழர் அமைப்பின் (Tamil Against Genocide) பேச்சாளரான ஐனனி ஐனநாயகம் போட்டியிடுகின்றார்.

இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரித்தானியாவிலும் ஐரோப்பாவிலும் 2001 ஆம் ஆண்டில் இருந்து பொதுமக்களுக்கான சுதந்திரம் படிப்படியாக பறிக்கப்பட்டு வருவதனையும் காவல்துறைக்கு அதிகாரங்கள் அதிகரிக்கப்படுவதனையும் அவதானித்து வருகிறேன். இது இந்த நாடுகளில் வாழும் சிறுபான்மைச் சமூகங்களை விளிம்பு நிலைக்கு தள்ளியுள்ளது.

இலங்கையில் நடைபெறும் தமிழ் இனப் படுகொலை விடயத்தில் பிரித்தானிய, ஐரோப்பிய அதிகார மையங்கள், பேதத்தினைக் காட்டுவதும் அது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்காதிருப்பதும் எனக்கு மிகுந்த கவலையைத் தருகின்றது.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் நிதி நிலமையைப் பலப்படுத்துதல் என்ற போர்வையில் ஐரோப்பிய மக்களின் வரிப்பணம், அனைத்துலக நாணய நிதியத்தின் ஊடக சிறிலங்கா போன்று, தடைசெய்யப்ட்ட ஆயுதங்களை வாங்கிப் போர் புரியும் நாடுகளுக்கு சென்றடைவதை நான் எதிர்க்கின்றேன்.

இன்னொரு புறத்தில் ஐரோப்பாவில் இனத்து வேசம் அதிகரித்து வருகின்றது. அதனால், இத்தேர்தலில் இனத்து வேசத்தை வளர்க்கும் கட்சியான பிரித்தானிய தேசியக் கட்சி, லண்டன் பிராந்தியத்தில் குறைந்தபட்சம் ஒரு ஆசனத்தைப் பெறும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

அனைத்துலகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நியமங்களினை ஏற்றுச் செயற்படவேண்டும் என்பதில், ஐரோப்பிய அரசுகளை நம்பியிருக்க முடியாது என்பது தெளிவாகின்றது.

இனப்படுகொலை தொடர்பில் மட்டுமல்லாமல், மனிதர்களைத் தடுத்து வைத்தல், சித்திரவதை செய்தல் தொடர்பிலும் இந்நிலையே காணப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக, இங்குள்ள பெரிய அரசியல் கட்சிகளையும், அனைத்துலக மட்டத்தில் செயற்படும் நிறுவனங்களயும் இலங்கையில் தொடரும் போரை நிறுத்த ஆக்கபூர்வ நடவடிக்கைகளில் இறங்குமாறு கேட்டுவருகின்றேன். இளையவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்திலும் சாதாரண மக்கள் ஆயிரக்கணக்கில் ஆர்ப்பாட்டப் பேரணிகளிலும் பங்கெடுக்கின்றனர்.

ஆனால், எம்மால் தாயகத்தில் எமது மக்கள் பட்டினிக்கு தள்ளப்படுவதனை தடுக்க முடியாதுள்ளது.

வானூர்தி மூலம் உணவுப் பொட்டலங்களை வீசுமாறோ, கப்பல் மூலம் உணவுப்பொருட்களை எடுத்துச் செல்லுமாறோ இங்குள்ள அரசுகளை இணங்க வைக்க முடியாதுள்ளது. யூத மக்களுக்கு எதிரான இனப்படுகொலையில் மட்டுமல்ல.

அண்மையில் பியாபிரா (Biafra), ருவண்டா (Rwanda), சேர்பனிக்கா (Srebenica) போன்ற நாடுகளில் ஏற்பட்ட இனப்படுகொலை நிகழ்வுகளில் இருந்தும் எந்தப்பாடத்தினையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.

கழிந்து போன சில மாதங்கள் இதனையே எமக்கு உணர்த்துபவையாக அமைந்திருந்தன.

இந்த வியடங்களை ஏற்கனவே நன்கு நிலை ஊன்றியிருக்கும் கட்சிகளின் கைகளில் விட்டுவிட முடியாது. உண்மையை பேசுவதற்கோ, மாற்றங்களை ஏற்படுத்துவதற்கோ அச்சமற்ற ஒரு சுயேட்சை வேட்பாளாரான நான் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களின்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விளைகின்றேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திற்கு மொத்தம் 72 அங்கத்தவர்கள் பிரித்தானியாவில் இருந்து தெரிவாகவிருக்கின்றனர். இதில் எட்டு உறுப்பினர்கள் லண்டன் பெரும்பாக பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்படுவார்கள்.

இந்த தேர்தல் பிரதேச ரீதியாக நடைபெறுவதுடன் உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைப்படி தெரிவு செய்யப்டுவார்கள். லண்டன் பெரும்பாக பிரதேசம் என்பது M25 நெடுஞ்சாலை வட்டத்திற்கு உட்பட்ட 33 உள்ளுராட்சி சபைகளை உள்ளடக்கிய பிரதேசமாகும்.

லண்டன் பிரதேசத்தில் பிரித்தானியாவின் முன்னணிக் கட்சிகளும் ஐந்து சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.