Friday, May 8, 2009

நாடுகளைப் பிளவுப்படுத்தும் சதிகாரரென அவர்கள் கருதும் சுவீடன் அமைச்சரின் இலங்கை விஜயத்தில் தடை ஏற்பட்டதற்கு மகிழும் சிங்களப் பத்திரிகை - ரட்ணா

சுவீடன் அமைச்சர் கார்ல் பிளிட்டிற்கு இலங்கை வர அனுமதி மறுக்கப்பட்டமை குறித்தும், கடந்த வாரம் இடம் பெற்ற வெளிநாட்டு இராஜதந்திரிகளின் இலங்கை விஜயம் குறித்தும் வார இறுதி சிங்களப் பத்திரிகையான இரிதா லங்காதீப (2009.5.3) ஒரு ஆக்கம் ஒன்றினை வெளியிட்டிருந்தது. சிறி ஹீன்பல்ல என்பவர் நியூயோர்க்கிலிருந்து இங்கு கட்டுரையை வரைந்திருந்தார். அதன் தமிழாக்கம் இங்கு தரப்படுகின்றது. மே முதலாம் திகதி முதல் ஐ.நா பாதுகாப்புச் சபையின் தலைமைத்துவம் ரஷ்யாவுக்கு கிடைத்தமை இலங்கைக்கு மிகவும் மகிழ்வூட்டும் செய்தியாகும். கடந்த மாதங்களில் இலங்கையைக் காப்பாற்ற சீனாவுடன் இணைந்து ரஷ்யா பாதுகாப்புச் சபையில் பெரும் பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த பல மாதங்களாக பல்வேறு நாடுகளுடன் இணைந்து இலங்கைப் பிரச்சினையை பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்க பலத்த முயற்சிகளில் ஈடுபட்ட மெக்சிக்கோ, அதன் தலைமைப் பதவியினை ஏற்றுக் கொண்ட பின்னர் இலங்கைப் பிரச்சினையின் உண்மை நிலையினை உணர்ந்து தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருந்தது.
சுதந்திரமும், இறைமையும் பொருந்திய இலங்கைக்கு புலிப் பயங்கரவாத்தினை அழிக்க சகல உரிமைகளும் உள்ளதாகவும், இப்பிரச்சினை அந்நாட்டின் உள்ளகப் பிரச்சினை என்றும் அதற்கு உதவுவது சகல நாடுகளினதும் கடமை என்றும் ரஷ்யா கருதுகின்றது. எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி முதல் பாதுகாப்புச் சபையின் தலைமைத்துவம் துருக்கிக்கு கிடைக்கின்றது. துருக்கியும் இலங்கையின் நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் நாடாகும்.
ஐ.நாவின் ஜோன் ஹோம்ஸ் இரு தடவைகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார். அதேபோன்று ஐ.நா பிரதிநிதி வோல்ட்டர் கேலின், பிரித்தானியா அமைச்சர் லியாம் பொக்ஸ் ஆகியோரும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டனர். பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட், பிரான்சிய வெளிநாட்டு அமைச்சர் பேர்னார்ட் குச்னருடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஒரு தினத்தினைக் கழித்தார். இவ்வாறு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகின்றனர் போகின்றனர். இவர்களினால் இலங்கைக்கு எந்தவிதமான நன்மைகளும் ஏற்பட்டுவிடவில்லை. மிலிபாண்ட்டும் குச்னரும் யுத்த நிறுத்தம் ஒன்றின் ஊடாக பிரபாகரனுக்கு உதவ பலத்த முயற்சிகளில் ஈபடுட்டாலும் ஜனாதிபதி மகிந்த மற்றும் பாதுகாப்புச்; செயலர் கோட்டாபயவின் கடும் பிரயத்தனங்களினால் அவர்கள் முயற்சி தோல்வியுற்றது. அவர்கள் தத்தம் நாடுகளுக்கு சென்று இலங்கை நண்பர்கள் எங்கள் கோரிக்கைகளை ஏற்கவில்லை என்றனர்.
இவர்களுடன் இலங்கை வர முயற்சித்த சுவீடன் வெளிநாட்டு அமைச்சர் கார்ள் பிளிட் வீசா கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் தனது பிரயாணத்தை இடைநிறுத்திக் கொண்டார். சுவீடனின் வெளிநாட்டு அமைச்சருக்கு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள வீசா வழங்கப்படவில்லை என்று கூறி இலங்கையில் உள்ள சுவீடன் தூதுவரை அவர்கள் அழைப்பித்துக் கொண்டனர். சுவீடனின் வெளிநாட்டு அமைச்சர் சுவீடனில் உள்ள இலங்கை தூதரகத்தில் வீசா பெற்றுக் கொள்ள விண்ணப்பித்திருக்கவில்லை. அவர் இலங்கையை அபகீர்த்திக்குள்ளாக்கும் வகையில் பொய்க் குற்றச்சாட்டினை முன்வைத்திருக்கின்றார். இவ்வாறு அவர் கூறியிருப்பதன் ஊடாக ஐரோப்பிய சங்கத்தின் தலைமைப்பதவியினை வகிக்கும் செக்கோஸ்லோவாக்கியாவின் வெளிநாட்டு அமைச்சர் கார்ள் ஷிவஷென்பர்கட் தவறான புரிந்துணர்வினைக் கொண்டிருப்பதாகத் தெரிய வருகின்றது. ஒரு சில வெளிநாட்டு பிரதிநிதிகள் ஐ.நாவுக்கு இலங்கை தொடர்பில் தவறான தகவல்களை வழங்குவதுடன், ஐரோப்பிய சங்கத்தினை ஏமாற்ற சுவீடன் வெளிநாட்டு அமைச்சர் திடசங்கற்பம் கொண்டிருக்கின்றாhர்.
ரஷ்ய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக யுத்த நடவடிக்கையினை முன்னெடுக்கும் போது புட்டினுக்கு எதிராக இருந்த பிரதான நபராக இந்த சுவீடன் வெளிநாட்டு அமைச்சர் செயற்பட்டார். சேர்பியா படையினரின் கொசோவோ பிரிவினைவாதிகளுக்கு நடவடிக்கைகளுக்க இவர் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் ரஷ்யாவுக்கும், கொசோவோவுக்கும் அவருக்கு தடை விதிக்கப்பட்டது. இவையெலாம் அவரது இலங்கை விஜயத்திற்கு தடையாக அமைந்து விட்டன. அவர் புலிகளின் ஆதரவாளர்களுடன் நெருங்கிய நட்பினைப் பேணி வருபவர் என்று தெரிய வந்துள்ளது. சுவீடனில் புலிகளின் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதும் இவரின் அனுசரணையினால் தான் என்றும் கூறப்படுகின்றது. அன்று கொசோவோ பிரிவினைவாதிகளைக் காப்பாற்றியது போன்று புலிப் பயங்கரவாதிகளை காப்பாற்றுவதே அவரின் பிரதான நோக்கமாகும்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பிரான்சிய வெளிநாட்டு அமைச்சர் குச்னர், எம்பிலிப்பிட்டியவில் வைத்து ஜனாதிபதிக்கு கைலாகு கொடுத்து மகிழ்ந்தாலும், அவரும் பயங்கரவாதத்திற்கு அனுசரணை அளிப்பவர் என்பபத கடந்த கால நிகழ்வுகளில் இருந்து தெரிகின்றது. மிலிபாண்ட்டும் அகங்காரம் கொண்ட தனது கொள்கையில் விடாப்பிடியான இலங்கைக்கு கேடு விளைவிக்கும் நபர் என்பது தெளிவாகின்றது.
பிரித்தானியா அமெரிக்காவுடன் இணைந்து ஐந்தாண்டுகளாக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் போரில் ஈடுபட்டு நிலைகுலைந்து போயுள்ள போதிலும் இலங்கை 30 ஆண்டுகளாக உலகின் மிகவும் மூர்க்கமான பயங்கரவாதிகளான் புலிகளுடன் போரிட்டு நிலைகுலைந்து போகாதிருப்பதனைப் பற்றி மிலிபாண்ட், கொழும்பிலிருந்து எம்பிலிப்பிட்டியவுக்கும், அங்கிருந்து வவுனியாவுக்கும் சென்ற பயணங்களின் போது நன்கு புரிந்து கொண்டார். லண்டனில் நிகழும் புலிகளின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முயலாத மிலிபாண்ட் இலங்கை நெருக்கடியினை எப்படி தீர்க்கப் போகின்றார் என்று நடுநிலைவாதிகள் கேள்வியெழுப்புகின்றனர்.
உலகின் பிரதான நகரங்களான வியன்னா, ஒட்டாவா, ஜெனீவா நகரங்களில் புலி ஆதரவாளர்கள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர். பல வாரங்களாக புலிக் கொடிகளை காட்சிப்படுத்திக் கொண்டு ஊர்வலம் சென்று கொண்டு வாகனங்கள் மீது கல்லெறிந்து கொண்டு மெற்கொள்ளும் வன்முறைகள் காரணமாக இந்த காடையர்கள் எந்த உலகத்திலிருந்து இங்கு வந்து குதித்தனர் என்று சர்வதேச ஊடகங்கள் கேள்வியெழுப்புகின்றன. கடந்த இரு வாரங்களில் மட்டும் புலி ஆதரவாளர்கள் 8 லட்ச டொலர்கள் பெறுமதியான சொத்துக்களுக்கு நாசம் விளைவித்துள்ளதாக கனடா ஒட்டாவா நகர மேயர் தெரிவித்துள்ளார்.
லண்டனில் இந்திய உயர்ஸ்தானிகராலய அலுவலகம் புலி ஆதரவாளர்களினால் தாக்கப்பட்டமையினால் பிரித்தானியாவில் இது வரை புலி ஆதரவாளர்களினால் செயற்பட்ட கீத் வாஸ் வீரேந்திர சர்மா ஆகிய எம்பிக்கள் பெரும் அசௌகரியத்திற்குள்ளாகியுள்ளனர். பேர்ளின் இலங்கை தூதுரகம் தாக்கப்பட்டது தொடர்பாகவும் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஒஸ்லோ இலங்கை தூதரகம் தாக்கப்பட்டமையை நோர்வே அரசாங்கம் முற்றாக மறந்து விட்டது.
கடந்த கனடா ஒட்டாவா நகரில் பாராளுமன்றம் முன்பாக புலி ஆதரவாளர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் புலிக் கொடிகளை ஏந்திய வண்ணம் பாராளுமன்ற வழியினை மறித்து கூச்சலிட்டதனால் கனடா குடிவரவு குடியகல்வு அமைச்சர் ஜேசன் கெனீ சற்று நேரம் அங்கு தரித்திருந்தார். இந்த இடையூறுகளைப் பொறுக்க முடியாத அமைச்சர் வெளிநாட்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது இவர்கள் அனைவரும் புலி ஆதரவாளர்கள். தமது உறவினர்களைக் காப்பாற்றக் கூறுபவர்கள் கறுப்புக் கொடியினை அல்லவா ஏந்த வேண்டும். அவர்கள் புலிகளுக்கு எதிராக அல்லவா ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். கனடாவினால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு கனடாவினால் உதவி கிடைக்கும் என்று கருத முடியுமா? நாம் இலங்கை அரசை யுத்தத்தினை நிறுத்தச் சொல்லுமாறு கோர முடியுமா? கனடாவை நாசமாக்குபவர்கள் இவர்களே என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.