Friday, May 22, 2009

இலங்கைத்தீவில் தமிழருக்கும் சிங்களவருக்கு இடைவெளி மிக அதிகமாகியுள்ளது– சுவிஸ் சமாதான வல்லுனர்

ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அங்கு தமிழ் மக்களிற்கும், சிங்கள மக்களிற்கும் இடையில் மிகவும் பெரிய ஆழமான இடைவெளி ஏற்பட்டிருப்பதாக சுவிற்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சமாதான வல்லுனரான மார்டின் ஸ்ருர்ஷிங்கர் சுவிஸ் இன்போவிற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.இறுதி நாட்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட யுத்தக்குற்றங்கள் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சமாதானமாக சேர்ந்து வாழ்வதில் சாத்தியத்தை அரிதாக்கியுள்ளது எனக் குறிப்பிட்ட அவர் இறுதி யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் அவர்களை காயப்படுத்தியுள்ளதுடன் ஸ்ரீலங்கா அரசின் கீழ் இனி வாழமுடியாது என்று தமிழ் மக்களில் பெரும்பான்மையோரை நினைக்கவைத்துள்ளது.

நடைபெற்ற ஆயுதப்போராட்ட காலம் தமிழ் மக்களின் அரசியல் பலத்தை குறைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், விடுதலைப்புலிகள் இராணுவரீதியாக தோற்கடிக்கபட்டுள்ளபோதிலும் அவர்கள் புலம்பெயர் தமிழ் மக்களின் கணிசமான அளவினரின் ஆதரவை இன்னமும் கொண்டிருப்பதை தான் உணர்வதாகக் குறிப்பிட்டார்.

பேர்ன், ஜெனீவா நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணிகளில் அதிகளவிலான விடுதலைப்புலிகளின் கொடிகளைக் கண்டு தான் ஆச்சரியமடைந்ததாக குறிப்பிட்ட அவர் இங்கு வாழும் இரண்டாவது தலைமுறையினர் புலிகளை ஆதரிப்பதற்கான அறிகுறிகள் தெரிவதாக குறிப்பிட்டார்.

மேலும் மேற்குலகின் உதவிகளை எதிர்பார்த்திருக்கும் ஸ்ரீலங்கா அரசு கடும் அழுத்தத்திற்குள்ளாகி உள்ளதாகவே தான் கருதுவதாக தெரிவித்த திரு மார்டின் ஸ்ருர்ஷிங்கர், இதற்கு ஆதாரமாக அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து ஸ்ரீலங்கா விண்ணப்பித்த கடன் தொகையான 1.9 பில்லியன் டொலர் பணம் வழங்கப்படுவதற்கு இது சரியான தருணமல்ல என்று ஐக்கிய அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஹிலரி கிளின்ரன் கூறியிருப்பதைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் விருப்பத்தை இந்தியா கொண்டிருக்கும் அதேவேளை சீனா ஸ்ரீலங்காவில் மிக்க முக்கியமான முதலீட்டாளராக மாறி உள்ளதையும் மார்டின் ஸ்ருர்ஷிங்கர் குறிப்பிடத்தவறவில்லை.

சமாதான பேச்சுவார்த்தைக்கு இடமளித்த நாடு என்ற வகையில் சுவிற்சர்லாந்தின் பங்களிப்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்த திரு மார்டின் ஸ்ருஷ்ங்கர் ஸ்ரீலங்கா அரசு விரும்பும் பட்சத்தில் மனிதாபிமான உதவிகளை சுவிற்சர்லாந்து வழங்கலாம் என தெரிவித்தார். அதேவேளை பாதிக்கப்பட்ட மக்களிற்கு நேரடியாக உதவிகள் சென்றடையும் வகையிலான எந்த தடையும் இல்லாத நிலை உருவாக்கப்படவேண்டும் என்று சுவிஸ் அரசு கேட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.