இலங்கையில் நடந்த போரில் இரு தரப்பினருக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தியா-இலங்கை நாடுகளுக்கு இடையேயான தொப்புள் கொடி உறவில், இலங்கைப் பிரச்சினைக்காக, முன்னாள் பாரதப் பிரதமரையும், ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களையும் இந்தியாவும் இழந்திருக்கிறது. இந்தப்போரின் முடிவு யாருக்கும் வெற்றியை அளிக்கவில்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின்போது தனி ஈழம் அமைத்துக் கொடுத்தே தீருவேன் என்று முழங்கி வந்த ஜெயலலிதா, தனது அறிக்கையில், தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும், பிற பிரிவினருக்கும் சம உரிமைகள் வழங்க வேண்டும் என்று மட்டும் கூறிக் கொண்டு நிறுத்தி விட்டார். தனி ஈழம் குறித்த தனது நிலை குறித்து அவர் இந்த அறிக்கையில் எதையும் கண்டு கொள்ளவில்லை.
அதேபோன்று பிரபாகரனின் இயக்கத்தை அழித்து விட்டதாலோ அல்லது அதன் தலைவர்களைக் கொன்று விட்டதாலோ இலங்கையில் வாழும் பெரும்பான்மை சிங்களர்களைப் போல் வேரூன்றியிருக்கும் பாரிய தமிழ்ச் சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை அகற்றி விட முடியாது.
இந்த அடிப்படை உண்மையை இலங்கை அரசு உணர்ந்து, ஒடுக்கப்பட்ட தமிழ் சமுதாயத்தின் நியாயமான மனக்குறைகளை உடனடியாகக் களைய வேண்டும். இலங்கையில் வாழும் குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமை அளிப்பதை உறுதி செய்யும் வகையில் தேவையான அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்களை உடனடியாகக் கொண்டு வரவேண்டும்.
மறுபடியும் அதே தவறுகள் நிகழும்…
தமிழர்கள் (வடக்கு, கிழக்கு மற்றும் மலைப் பிரதேசங்களில் வாழ்பவர்கள்) இஸ்லாமியர்கள் மற்றும் பிற சமுகத்தவர்கள் அனைவரும் கௌரவத்துடனும், சம உரிமையுடனும், சுய மரியாதையுடனும் வாழ்வது உறுதி செய்யப்பட வேண்டும். இல்லையெனில், நடந்து முடிந்த அதே வரலாறு மறுபடியும் நிகழும், அமைதியின்மை மற்றும் கட்டுக்கடங்காத கொலைகள் தொடரும்.
கடந்த 30 ஆண்டு காலப்போரில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து, வீடுகள் இல்லாமல், உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். வஞ்சம் தீர்க்கும் வகையில், ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். லட்சக்கணக்கானவர்கள் முட மாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அருவருக்கத்தக்க நிலையில் தமிழர்கள்…
இதற்கு சமமான எண்ணிக்கையில் அப்பாவி இளம் குழந்தைகள் அனாதைகளாக ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான அருவருக்கத்தக்க, ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பசி, நோய், வறுமை, இல்லாமை ஆகியவை தான் அவர்கள் எங்கு நோக்கினும் தாண்டவமாடுகின்றன. 30 ஆண்டு கால இடைவிடாத குண்டு மழை காரணமாக, தமிழ்ப்பகுதிகள் அனைத்தும் தரைமட்டமாகி விட்டன. பல வருடங்களாக வீதிகள் திருத்தப்படவில்லை. முறையான மருத்துவ வசதிகள் அந்தப்பகுதிகளில் இல்லை. மின்சாரம் இல்லை. தொலை பேசிகள் இல்லை… அதிகாரப்பூர்வமாக யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதால், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் இதர சர்வதேச நிவாரண அமைப்புகள் போர்ப்பகுதிகளுக்குள் நுழைய இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.
அங்குள்ள நிலைமையை முதலில் கண்டறிய, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் போர்ப் பகுதிகளுக்குச் செல்ல அனு மதிக்கப்பட வேண்டும். பல ஆண்டுகளாக வாய் மூடப்பட்ட சர்வதேச ஊடகங்களை, இராணுவ உதவியுடன் சுற்றுப்பயணமாக அழைத்துச் செல்லாமல், சுதந்திரமாக போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர்கள் செல்ல இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.
இந்தியா பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது..
தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதிலும், போரினால் அழிக்கப்பட்ட பகுதிகளில் பாரிய அளவில் கட்டுமானப் பணிகளை ஆரம்பிப்பதிலும் இந்தியாவும் தன்னுடைய பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது. எங்களுக்கு ஆதரவான ஆட்சி மத்தியில் அமைக்கப்பட்டால், இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக 10,000 கோடி ரூபாய் தொகுப்பை இந்திய அரசு வழங்க வலியுறுத்துவோம் என்று அதிமுகவின் 15வது மக்களவைத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து இருந்தோம்.
மத்திய அரசின் அதிகாரப் பகிர்வில் அதிமுக இடம் பெறவில்லை என்றாலும், 1.5 கோடி தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற கூட்டணிக் கட்சியின் தலைவர் என்ற வகையில், இலங்கையில் மிகப்பெரிய அளவில் கட்டு மானப்பணிகள் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்கான முயற்சிகளில் உடனடியாக இந்திய அரசு ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கை தமிழ் மக்களுக்காக டெல்லியில் குரல் கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியை கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்
No comments:
Post a Comment