Thursday, May 14, 2009

கனடா ரொறன்ரோவில் நடைபெற்ற ‘அடங்காப்பற்று’ பேரணி மக்கள் வெள்ளம் ஒருலட்சத்தையும் தாண்டியது

சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழினப்படுகொலையை நிறுத்துவத்தவதற்கு உடனடிப் போர்நிறுத்தம் மேற்கொள்ள சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வேண்டி கனடிய தமிழ் மாணவர் சமூகமும் கனடியத் தமிழர் சமூகமும் இணைந்து ரொறன்ரோவில் ‘அடங்காபற்று' மாபெரும் மனிதச்சங்கிலிப் பேரணி புதன் கிழமை 13ம் திகதி மதியம் குயின்ஸ்பார்க ஒன்ராறியோ பாராளுமன்றம் முன்பாக இணைந்து நடத்தியிருந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வன்னியில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் சிறீலங்கா ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டதையடுத்து கொதித்தெழுந்து உணர்ச்சிவசப்பட்ட ரெறன்ரோ தமிழ் இளையோர், நகரின் பெருந்தெருக்களை பலமணி நேரம் முடக்கியிருந்தனர். இதனால் நகரின் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதமடைந்திருந்தது.

இந்தச்செய்தி கனடாவின் முக்கிய தேசிய செய்தி ஸ்தாபனங்களின் செய்திகளில் இடம்பிடித்தது மட்டுமின்றி முக்கிய அரசியளாளர்களின் வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளாகியிருந்தது. இந்த நிலையில் அடங்காப்பற்று பேரணி நேற்று புதன்கிழமை நடைபெற்றது. கனடாவின் முக்கிய ஊடகங்கள் அடங்காப்பற்று பேரணி தனியே பேரணியாகத்தான் இடம்பெறப்போகின்றதா? அல்லது கடந்த ஞாயிறன்று பெருந்தெரு முடக்கப்பட்டது போன்ற நிகழ்வுகள் நடைபெறுமா என்ற கேள்வியை எழுப்பியிருந்தன.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற பேரணியில் ஒருலட்சத்துக்கும் மேற்பட்டமக்கள் கலந்துகொண்டனர் என சுயாதீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை எவ்வித அசம்பாவிதங்கள் எதுவுமின்றி மிக அமைதியாக அடங்காப்பற்று நிகழ்வு நடைபெற்றுள்ளது. மதியம் 12.00 மணியிலிருந்து குயின்ஸ்பார்க ஒன்ராறியோ பாராளுமன்றம் முன்பாக திரள ஆரம்பித்தது தமிழ் மக்கள் வெள்ளம்.

தமிழீழத்தேசியக் கொடி, கனடியத்தேசியக் கொடி ஆகிய கொடிகள் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. ஒன்ராரியோ பாராளுமன்ற உறுப்பினர்கள், கடந்த மூன்றாந்திகதியிலிருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் குணம் அவர்கள் மற்றும் கனடிய அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பல பிரமுகர்கள் சிறப்புரை நிகழ்த்தினர்.அதனைத்தொடர்ந்து குயின்ஸ் பார்க் திடலில் இருந்து பேரணியாக நகர ஆரம்பித்தது மக்கள் வெள்ளம். நகர ஆரம்பித்த பேரணி ரொறன்ரோ பெரு நகரை ஊடறுத்துச் செல்லும் மிகம்பெரும் வீதிகளான யூனிவசிற்றி வீதி வழியாகச் சென்று கொலிஜ் வீதி, யங் வீதி, குயின் வீதி ஆகிய வீதிவழியாக சென்று மீண்டும் யூனிவசிற்றி வழியாகச் சென்று, திரும்பவும் குயின்ஸ் பார்க்கை வந்தடைந்தது.

இந்த வீதிகளினூடே பல பெரும் வீதிகள் குறுக்கே செல்கின்றன. பொதுவாகவே மக்கள் நெருக்கடி மிக்க இவ்வீதிகள் இப்பேரணியின் விளைவாக போக்குவரத்து முடக்கப்பட்டதனால் ரொறன்ரோ நகரின் போக்குவரத்தும் முடக்கப்பட்டது. இப்பேரணியில் மாற்றினத்தவர்களும் கலந்துகொண்டதுடன் கனடிய தொழிற்சங்கங்கள் உட்பட பல கனடிய அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
அடங்காப்பற்றுப் பேரணியை அனைத்து கனடிய தேசிய ஊடகங்களும் நேரடி ஒலி,ஒளிபரப்புச்செய்ததுடன் தமது பிரதான செய்தியில் முதன்மைச் செய்தியாக வெளிப்படுத்தியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பேரணிக்குப் பாதுகாப்புக்காக பல சிறப்புக் காவற் துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். உந்துருளிப் படைப்பிரிவினர், குதிரைப் படைப்பிரிவினர் உடபட பல சிறப்புப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். காவற் துறையினருக்கும் மக்களுக்குமிடையே புரிந்துணர்வுடன் கூடிய நட்புறவுநிலை காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.