இடம்பெயர்ந்துள்ள அப்பாவித் தமிழ் மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களுக்குச் சென்று, அவர்களின் துன்ப துயரங்களை அறிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்காமல், அவர்களின் அடிப்படை உரிமை மீறலுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல போவதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நலன்புரி நிலையங்களுக்கு சென்று, அங்குள்ள மக்களின் துன்ப துயரங்களை அறியவும் அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகளைப் பார்வையிடவும் அனுமதி வழங்கப்படுமானால், இலங்கையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று முற்பகல் எதிர்க்கட்சி தலைவரின் பணிமனையில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் ஜயலத் ஜயவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார். வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தவர்களைப் பார்வையிடவும் மக்கள் கவனிக்கப்படும் விதத்தைக் காணவும் இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் செயலாளருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதற்கு முன்னர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். ஜனாதிபதி இவ்வாறான அழைப்புகளை விடுக்கும் அதேவேளை சர்வதேச தலையீடுகள் அநாவசியமானது. எமக்கு எமது பிரச்சினையை தீர்க்க இடமளிக்குமாறு நாட்டின் தலைவரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் சர்வதேசத்திற்கு கூறிவருவது, ஒன்றுக்கொன்று முரண்பாடானது.
ஐக்கிய நாடுகள் செயலாளர் இலங்கைக்கு சென்று, அகதி முகாம்களைப் பார்வையிட்ட பின்னர், ஏதேனும் யோசனைகள் பரிந்துரைகளை முன்வைத்தால் அவற்றை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்த அரசாங்கம் ஏற்க தயாராக உள்ளதா எனவும் ஜயலத் ஜயவர்தன கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையின் பிரச்சினையை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதாக அரசாங்கம் ஐக்கிய தேசிய கட்சியின் மீது குற்றம்சுமத்துகிறது.
எனினும் அரசாங்கம் இந்தப் பிரச்சினையில் சர்வதேசம் கவனத்தைச் செலுத்தும் வகையில் மறைமுகமாக சூழல் ஒன்றை உருவாக்கி வருவதாக தாம் அரசாங்கத்தின் மீது குற்றம்சுமத்துவதாகவும் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களுக்கு விஜயம் செய்ய அனுமதியளிப்பதில்லை.
மன்னார் வைத்தியசாலைக்குக் கூடச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இவ்வாறான சூழ்நிலையில் நாடாளுமன்ற ஜனநாயகம் எங்கு இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ள ஜயலத் ஜயவர்தன, மகிந்த ராஜபக்ஷ சர்வதேசத்திற்கு வழங்கும் முன்னுதாரணம் மற்றும் செய்தி என்ன எனவும் கேட்டுள்ளார். நிலங்களைக் கைப்பற்றியதன் மூலம் மாத்திரம் நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியாது.
நாட்டின் அரசியல் சாசனத்தின்படி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்கும் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா, மன்னார் பிரதேசங்களுக்குக் கூட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. தமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி மோதல்களில் காயமடைந்த வவுனியா வைத்தியசாலையில் 2 ஆயிரம் பொதுமக்கள் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் இவர்களில் 129 பேர் குழந்தைகள் எனவும் ஜயலத் கூறியுள்ளார்.
உயிர் ஆபத்துக்கு மத்தியில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மக்களின் காயங்களுக்கு தேவையான மருந்துப் பொருட்கள் கூட வவுனியா வைத்தியசாலையில் இல்லை எனவும் வவுனியா வைத்தியசாலையில் பிரேத அறை சடலங்களினால் நிரம்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சையளிக்க மனநல மருத்துவர்கள் இல்லை.
அதேவேளை பாதுகாப்பு வலய பகுதியில் 20 ஆயிரம் மக்களே இருப்பதாக அரசாங்கம் கூறிய போதிலும் அங்கு, லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருப்பதாகவும் இந்த மக்கள் பாரிய உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி இருப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்த சங்கரி கூறியுள்ளதாகவும் அரசாங்கம் இவற்றுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் ஜயலத் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment