வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்து ஓமந்தைப் பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினத்தின் பாதுகாப்புக்காக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.
பி.பி.சி. ஊடகவியலாளரிடம் இன்று வெள்ளிக்கிழமை காலை இவ்வாறு தெரிவித்த சம்பந்தன், இது தொடர்பாக தாம் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் தொடர்பாக விவரித்துக் கூறவில்லை. இது தொடர்பாக சம்பந்தன் மேலும் முக்கியமாகத் தெரிவித்ததாவது:
தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பெரும் துன்பத்தில் இருக்கும் நிலைமையில் தான் மட்டும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறி விடுவதற்கு விரும்பாத நிலையிலேயே கனகரத்தினம் தொடர்ந்தும் வன்னியில் போர்ப்பகுதியில் தங்கியிருந்தார். இப்போது அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் வெளியேறிய போது அவரும் வெளியேறியிருப்பதாக அறிகின்றோம்.
அவரின் நிலைமைகள் தொடர்பாகவும் எமக்கு சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அவர் எந்தவிதமான குற்றத்தைச் செய்தார் என்று எவராலும் குற்றம் சாட்ட முடியாது. அவர் தான் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களுடன் இறுதி வரையில் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் அங்கு இருந்திருக்கின்றார். அதனைவிட அவர் வேறு எதுவும் குற்றத்தைச் செய்தார் என யாராலும் கூறமுடியாது.
அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் நாம் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம். ஆனால் அவை தொடர்பாக இப்போது பகிரங்கமாகக் கூறக்கூடிய நிலையில் நான் இல்லை. இந்த விடயத்தில் எம்முடைய முயற்சிகளை நாம் தொடர்ந்து மேற்கொண்டு வருவோம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment