இலங்கை இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் மனிதாபிமானப் பேரவல நிலை குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என ஐ.நாவின் சுயாதீன பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மைய மாதங்களில் இடம்பெற்ற இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்த சூழ்நிலை குறித்து விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் சுயாதீன பிரதிநிதிகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
வன்னி மக்களின் சுகாதாரம், உணவுத்தேவை, குடிநீர்தேவை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் எவ்வாறு பூர்த்திச் செய்யப்படுகின்றன என்பது குறித்து கண்காணிக்கப்பட வேண்டுமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிலிப் அல்ஸ்டன், ஆனந்த் க்ரோவர், ஒலிவர் டி சட்டர் மற்றும் கத்ரீனா டி அல்பிக்யூரி ஆகிய ஐக்கிய நாடுகளின் முக்கியஸ்தர்கள் கூட்டாக இணைந்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
பொதுமக்களுக்கு ஏற்பட்டு வரும் இழப்புக்கள் குறித்து தெளிவான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களில் ஆயிரக் கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதற்கான சாத்தியங்கள் வெகுவாகக் காணப்படுவதாக பிலிப் அல்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் உயிரிழப்புக்கள் குறித்து அரசாங்கம் தொடர்ச்சியாக மௌனம் காத்து வரும் அதேவேளைஇ சுயாதீன ஊடகவியலாளர்களோ தொண்டு நிறுவனங்களோ யுத்த வலயத்திற்கு அனுமதிக்கப்படாமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் குறைந்தபட்சம் 50000 பேர் வரையில் சிக்கியிருக்கக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
மோதல் தவிர்ப்பு வலயத்திற்கு அரசாங்கம் போதியளவு மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்கவில்லை என சுயாதீன பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரசேதங்களிலோ வன்னிப் பொதுமக்களது அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் அவர்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment