Saturday, May 9, 2009

நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட அன்று வெள்ளை வானில் கடத்தப்பட்ட மனித உரிமை முகாமையாளர்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் மனித உரிமைகள் நிறுவனத்தின் திட்ட முகாமையாளான ஷ்ரீபன் சுந்தரராஜ் வெள்ளை வானில் வந்த ஆயுதக் குழுவினால் கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகில் நேற்று முன்நாள் இரவு கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கொழும்பு கொள்ளுப்பிட்டி அலோ அவெனியுவில் இயங்கி வரும் மனித உரிமைகள் நிறுவனத்தின் திட்ட முகாமையாளரான 39 வயதுடைய சின்னவன் ஷ்ரீபன் சுந்தரராஜ் கொள்ளுப்பிட்டி காவல்துறையினரால் கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆம் நாள் கைது செய்யப்பட்டு நேற்று முன்நாள் வியாழக்கிழமை காலை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டிருந்தார்
இந்நிலையிலேயே சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் இவர் நேற்று முன்நாள் இரவு கொழும்பு நகர சபை மண்டபத்திற்கு அருகில் கடத்திச் செல்லப்பட்டுள்ளாதாக உறவினர்கள் கொள்ளுப்பிட்டி, கறுவாத் தோட்டம் ஆகிய காவல்துறை நிலையங்களில் முறையிட்டுள்ளனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக ஷ்ரீபன் சுந்தரராஜ் கல்கிசையில் உள்ள தனது வீட்டில் இருந்து நண்பன் ஒருவரின் இல்லத்தில் தங்குவதற்காக தனது மனைவி மூன்று பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் தனது சட்டத்தரணி ஆகியோருடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

வெள்ளை வானில் வந்த ஆயுதம் தாங்கியவர்கள் ஷ்ரீபன் பணயம் செய்த வாகனத்தை மறித்து பலாத்காரமாக வெளியே இழுத்து தமது வெள்ளை வானில் ஏற்றியதாக உறவினர்கள் காவல்துறைக்கு அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், வெள்ளை வானில் வந்தவர்கள் சிறிலங்கா புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் எனவும் தமது முறைப்பாட்டில் உறவினர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

ஷ்ரீபன் சுந்தரராஜ் 2001 ஆம் ஆண்டில் இருந்து 2003 வரை சமூக விஞ்ஞான உதவி விரிவுரையாளராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் 2003 ஆம் ஆண்டில் இருந்து 2004 ஆம் ஆண்டு வரை கொழும்பு பல்கலைக்கழகத்திலும் கடமையாற்றியுள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு இல்லை என காவல்துறையினர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியதை அடுத்தே கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இவரை விடுதலை செய்ததாக சட்டத்தரணி இரத்னவேல் தெரிவித்தார்.

காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கொள்ளுப்பிட்டி காவல்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதும் அங்கு சென்ற ஒருவர் ஷ்ரீபன் மனைவியிடம் பணம் கோரினார் என்றும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தபோது அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

பின்னர் ஒரு மில்லியன் பணம் கப்பமாக கோரப்பட்டது என்றும் அதற்கிடையில் நீதிமன்றத்தினால் ஷ்ரீபன் சுந்தரராஜ் விடுவிக்கப்பட்டார் எனவும் உறவினர்கள் மேலும் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.