வன்னியில் கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் சுமார் 10 ஆயிரம் பொதுமக்கள் வரை சிறிலங்காப் படையினரின் தாக்குதலில் பலியாகியுள்ளனர். சுமார் 20 ஆயிரம் பேர் வரை காயமடைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த தகவலை வெளியிட்டனர்.
கடந்த 27 ஆம் திகதி அரசாங்கம், பாதுகாப்பு வலயங்களின் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என உறுதியளித்தபோதும், தொடர்ந்தும் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி பொதுமக்களை கொலை செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தினார்
இதற்கு ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதிகளின் தகவல்கள், ஆதாரங்களாக உள்ளன.
வன்னியில் வாழும் தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.
அரசாங்கம், பாதுகாப்பு வலயத்திற்குள் தமிழீழ விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள் எனக்கூறி, தமிழ் மக்களை இன அழிப்புக்கு உள்ளாக்கி வருவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
இந்தநிலையில் இந்தியா உட்பட்ட சர்வதேச நாடுகள், கவலையை வெளியிட்டுக்கொண்டிருக்காமல் யுத்தத்தை நிறுத்த முன்வரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த 3 நாட்களில் மாத்திரம், 100 சிறுவர்கள் உட்பட்ட 580 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டனர். இது கண்டிக்கத்தக்க செயலாகும் என நாடாளு:மன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்
அரசாங்கத்திற்கு பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது. அதேபோல தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய கடமையுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
அரசாங்கம், வன்னியில் தற்போது சுமார் 50 ஆயிரம் பொதுமக்களே உள்ளதாக தெரிவிக்கின்ற போதும், அங்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்
இவர்களுக்காக கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி 100 மெற்றிக் தொன் உணவுப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இது பொதுமக்களுக்கு இரண்டு வாரங்களுக்கே போதுமானதாகும். இதன் பின்னர் 30 மெற்றிக்தொன் உணவுப்பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
இது இரண்டு நாட்களுக்கே அங்குள்ள மக்களுக்கு போதுமானதாக இருக்கும்
இந்தநிலையில் வன்னியில் பசியாலும் கனரக ஆயுதங்களின் பயன்படுத்தலாலும் பொதுமக்கள் பலியாகிக் கொண்டிருப்பதாக சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment