சிறிலங்கா இராணுவம் திட்டமிட்டு நடத்திவரும் இனப் படுகொலையால் ஈழத் தமிழர்கள் படும் துயரத்திற்காக வருந்துவது போல சோனியா காந்தியும், தமிழ்நாட்டில் முதல்வராக உள்ள கருணாநிதியும் சென்னையில் நேற்று நடத்திக் காட்டினர். இப்படிப்பட்ட ஒரு நாடகம் தான் தமிழ்நாட்டில் நேற்றும், நேற்று முன்தினமும் அரங்கேற்றப்ட்டுள்ளது. தமிழகம் அளிக்கப் போகும் அந்தத் தீர்ப்பு ஈழத் தமிழினத்தின் துயரத்திற்கு முடிவு கட்டக் கூடிய ஒரு தலை கீழ் மாற்றத்தை இந்திய அரசின் அயலுறவு அணுகுமுறையில் உருவாக்கும்.
உள்ளதை உள்ளபடி கூறாமல், முழு உண்மையையும் மறைத்து திட்டமிட்டதொரு பொய் பிரச்சாரத்தை மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் தலைவரான சோனியா காந்தியும், தமிழ்நாட்டில் முதல்வராக உள்ள கருணாநிதியும் சென்னையில் நேற்று நடத்திக் காட்டினர்.
இப்படிப்பட்ட ஒரு நாடகம் தான் தமிழ்நாட்டில் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் சென்னையில் அரங்கேற்றப்பட்டுள்ளது.
தாக்குதல் நின்றது, ஆனால் இரத்த ஆறு ஓடுகிறது
இலங்கையில் என்ன நடக்கிறது என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாது என்ற திடமான நம்பிக்கையுடன் பேசிய சோனியா காந்தி, “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் உறுதியான நடவடிக்கையின் காரணமாக இலங்கையில் வடக்கு போர் பகுதியில் சிறிலங்க அரசு மேற்கொண்டு வந்த இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது” (the Sri Lankan Government had stopped combat operations against Tamils in the northern war zone due to the "resolute efforts" of the UPA government) என்று பேசினார்.
இப்படி சோனியா காந்தி சென்னைத் தீவுத் திடலில் மாலை 5 மணியளவில் பேசத் துவங்குவதற்கு முன்னர் - சனிக்கிழமை மாலை முதல் - இதுவரை நடத்தாத அளவிற்கு ஒரு மாபெரும் தாக்குதலை, அனைத்து வகையான கனரக ஆயுதங்களுடன் சிறிலங்க இராணுவம் அப்பாவித் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டது. அதன் விளைவாக பாதுகாப்பு வலயத்தி்ற்குட்பட்ட முள்ளிவாய்க்கால், வட்டுவாய்க்கால் ஆகிய பகுதிகளில் தஞ்சமடைந்திருந்த 2,000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
2,000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்ட தகவல் செய்திக் கீற்றாக தமிழ்நாட்டின் தொலைக்காட்சிகளில் மதியத்திலிருந்தே ஓடிக்கொண்டிருக்க, மாலையில் பேசிய சோனியா காந்தி இலங்கையில் ஏதோ முழு அமைதி நிலவுவது போல பேசினார். சோனியா இராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டது என்று பேசியதை, காங்கிரஸ் கட்சி மொழி பெயர்பாளர் ‘போர் நிறுத்தம்’ என்று மேன்மைபடுத்திச் சொன்னார்.
சிறிலங்க இராணுவம் திட்டமிட்டு நடத்திவரும் இனப் படுகொலையால் ஈழத் தமிழர்கள் படும் துயரத்திற்காக வருந்துவது போல ‘போர் முனையில் சிக்கிக் கொண்ட அப்பாவிப் பெண்கள், சிறுவர்கள், முதியோர் ஆகிய தமிழ் சகோதர சகோதரிகளின் நெஞ்சைப் பிளக்கும் அவலத்தை நினைத்து வேதனையும், துயரமும் அடைவதாக’ இந்த ஆறு மாத காலத்தில் முதல் முறையாக சோனியா காந்தி திருவாய் திறந்தருளினார்.
என்னே காருண்யம்! போரை நிறுத்துங்கள் என்று எத்தனை கூக்குரல்கள் தமிழ்நாட்டில் இருந்து எழுப்பப்பட்டது. எத்தனைத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. எத்தனை போராட்டங்கள் நடத்தப்பட்டது. பிரதமருக்கு எழுதிய கடிதங்கள் எத்தனை, அடிக்கப்பட்ட தந்திகள் எவ்வளவு. மொத்தமாகவும், நேரடியாகவும்தான் எத்தனை சந்திப்புகள். ஆனால் அத்தனைக்கும் அமைதி காத்த ‘அன்னை’ சோனியா, முதல் முறையாக தமிழ்நாட்டு மக்களின் சோகத்தை உணர்ந்துள்ளது நேற்றுதான் தெரியவந்துள்ளது.
இத்தனை போராட்டங்கள் நடத்தினோமே, ஏன் போரை நிறுத்துமாறு சிறிலங்க அரசை மத்திய அரசு ஒரு முறை கூட வலியுறுத்தவில்லை என்று சட்டப் பேரவையில் அய்யகோ உள்ளிட்ட 3 தீர்மானங்களை நிறைவேற்றிய தமிழக முதலமைச்சரும் கேட்கவில்லை. ஆனால், ‘இலங்கைத் தமிழர்களுக்காக மத்திய மாநில அரசுகள் எவ்வளவோ செய்தன’ என்று நெஞ்சுருகப் பேசினார்.
சோனியா வருவதற்கு ஒரு நாள் முன்னர் தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங் பேசியதுதான் இதைவிட அதிசயமானது. “இலங்கையில் தமிழர்கள் தொடர்பான ஒரு பிரச்சனையை நாங்கள் அங்கிகரிக்கின்றோம். இலங்கைத் தமிழர்கள் தவறாக நடத்தப்படுகிறார்கள், அவர்களை சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்த வேண்டும் என்று தமிழர்களும், இந்தியர்களும் ஒருசேர விரும்புகிறோம்” என்று அவர்களின் விடுதலைப் போராட்டத்தை ஏதோ சுய மரியாதைப் பிரச்சனையாக பேசினார்.
ஆனால் அவர்களின் சம உரிமைக்காகவும், சுய மரியாதையும், கண்ணியமும் பெற்ற சம குடிகளாக வாழ இந்த 5 ஆண்டுக் காலத்தில் தனது ஐ.மு. கூட்டணி அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டது? என்பதை மன்மோகன் சிங் கூறவில்லை.
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை உறுதி செய்யத்தான் அந்நாட்டு அரசு மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைக்கு இந்தியா உதவி வருகிறதா? ‘சீக்கிரம் முடித்துக் கொள்ளுங்கள்’ என்று ஆலோசனை வழங்குவது அதற்குத்தானா? அந்த நாட்டிற்கு எந்த அந்நிய நாட்டு அச்சுறுத்தலும் இல்லாத நிலையில் எதற்கு சிறிலங்க அரசிற்கு இந்தியா இராணுவ உதவி செய்கிறது என்பதற்கு எந்த விளக்கமும் தரவில்லை.
இந்திய அரசின் நோக்கம், “போர் பகுதியில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றி அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அளிப்பதே முதல் தேவை, என்றும் பாதுகாப்பு வலையத்திலிருந்து மக்களை மீட்கவே சிறிலங்க இராணுவம் மனிதாபிமான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றும் ராஜபக்ச கூறிவருவதையே மன்மோகன் சிங்கும் கூறிவிட்டு சென்றார்.
தமிழ்நாட்டு மக்கள் தங்களின் இரத்த சொந்தங்களாகக் கருதும் ஈழத் தமிழர்களின் பிரச்சனையை, அதன் உண்மையான பரிமாணத்தில் நோக்காமல், இந்தியாவினுடைய பூகோள நலன் என்ற பார்வைக்கு உட்படுத்தி, அப்பாவித் தமிழர்களை திட்டமிட்டுக் கொன்று குவித்துவரும் சிறிலங்க இனவெறி அரசிற்கு தொடர்ந்து உதவிவரும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக புரிந்துள்ளது.
“சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் மக்கள் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட வாழ்விடங்கள் மீது அந்நாட்டு இராணுவத்தினர் கடந்த வார இறுதியில் நடத்திய தாக்குதலால் அங்கு இரத்த ஆறு ஒடுகிறது” என்று ஐ.நா. கூறியுள்ளது.
கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. பேச்சாளர் கார்டன் வெய்ஸ், 9ஆம் தேதி இரவு முழுவதும் சிறிலங்கப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் சிறுவர்கள் மட்டும் 100க்கும் அதிகமாக உயிரிழந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
ஆனால் சென்னைக்கு வந்து பேசும் காங்கிரஸ் கட்சியின் டெல்லித் தலைவர்களுக்கும் அவர்களின் தமிழக கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் அங்கு போர் நிறுத்தம் நிலவுகிறது. அமைதிக் காற்று வீசுகிறது. தமிழ் மக்களின் இன்னல் நீங்க அன்னை சோனியா அனைத்தும் செய்கிறார்!
கால் நூற்றாண்டிற்கு முன்னர் தேர்தல் பிரச்சாரத்திற்காக மட்டும் தமிழகம் வந்து, ‘டமில் மக்ளுக்கு வண்கம்’ என்று கூறி, மிகச் சுலபமாக அவர்களின் வாக்குகளை பெற்று வென்று டெல்லி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் பழைய தந்திரத்தைத்தான் சோனியாவும், மன்மோகனும் இன்றும் கடைபிடிக்கிறார்கள். மக்களின் உணர்வுகளை கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல், தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுக அரசு ‘எல்லாவற்றையும்’ பார்த்துக் கொள்ளும் என்ற நினைப்பில் வேகமாக பிரச்சாரம் செய்துவிட்டு விண்ணில் பறந்து மறைந்துவிட்டனர்.
மானுடம் சகித்துக் கொள்ள முடியாத இரத்த ஆற்றில் ஈழத் தமிழினம் செத்து மிதந்துக் கொண்டிருக்கிறது. சம உரிமை கோரி போராடிய அம்மக்கள் அனுபவித்து வரும் துயரம் எந்த அளவிற்கு தமிழக மக்களின் உணர்வுகளைப் பாதித்துள்ளது என்பது சனிக்கிழமை காலை தெரியும். தமிழகம் அளிக்கப் போகும் அந்தத் தீர்ப்பு ஈழத் தமிழினத்தின் துயரத்திற்கு முடிவு கட்டக் கூடிய ஒரு தலை கீழ் மாற்றத்தை இந்திய அரசின் அயலுறவு அணுகுமுறையில் உருவாக்கும்.
அது ஜனநாயகத்தின் பலத்தையும் தெளிவாக நிரூபிக்கும்.
No comments:
Post a Comment