Tuesday, June 2, 2009

ஊடகவியலாளர்களை மிரட்டுகிறது சிறிலங்கா அரசு: எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு

இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்குச் செல்லும் பத்திரிக்கையாளர்களை சிறிலங்கா அரசும், அந்நாட்டு இராணுவமும் தடுப்பது மட்டுமின்றி, மிரட்டியும் வருவதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
அப்பாவித் த‌மிழர்களின் நிலையறிய அவர்கள் வாழும் பகுதிகளுக்கோ அல்லது அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கோ செல்வதற்கு இன்னமும் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் அவர்களின் நிலை பற்றிய தகவல்கள் ஏதும் வெளிவராமல் சிறிலங்கா அரசு தடுக்கிறது. அங்குள்ள நிலையைப் பற்றி பேசும் செய்தியாளர்களும், சாட்சிகளும் மிரட்டப்படுகின்றனர்” என்று எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் (Reporters without Borders) அமைப்பு கூறியுள்ளது.

“போர் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே இதற்கு மேலும் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்குச் செல்லவோ, அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச் செல்லவோ ஊடகங்களுக்கு இராணுவம் கட்டுப்பாடு விதிப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை” என்று கூறியுள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு, “போரினால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை திட்டமிட்டே குறைத்துக் காட்டியதாக ஐ.நா. மீது பிரெஞ்ச் நாளிதழ் லீ மாண்ட் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அகதிகள் முகாம்களுக்குச் செல்ல பத்திரிக்கையாளர்களுக்கும், மனிதாபிமான பணியாளர்களுக்கும் எவ்வித தடையுமற்ற அனுமதியைப் பெற்றுத் தர ஐ.நா. முன்வர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளது.

“அங்கே என்ன செய்யப் போகிறீர்கள்” என்று கேள்வி எழுப்பி தன்னை சிறிலங்கா இராணுவத்தினர் திருப்பி அனுப்பி விட்டதாக மனிதாபிமான பணியாளர் ஒருவர் கூறியுள்ளார். அரசின் அனுமதியின்றி பத்திரிகையாளர் எவரும் அங்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அப்பாவித் தமிழர்கள் அகதிகளாக அடைத்து வைககப்பட்டிருக்கும் முகாம்களைப் பற்றி செய்திகள் வெளியிட்ட அயல் நாட்டுப் பத்திரிக்கையாளர்களை அரசு குறிவைக்கிறது. சானல் 4 என்கின்ற பிரிட்டன் தொலைக்காட்சிக்கு பணி புரியும் ஊழியர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அவ்வமைப்பு கூறியுள்ளது.

சிறிலங்கா ஊடகங்களைச் சேர்ந்த எந்தப் பத்திரிக்கையாளரும் தமிழர் பகுதிகளுக்குச் செல்வதில்லை. ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் உள்ளிட்ட ச்ர்வதேச அமைப்புகளின் தலைவர்களோடு இணைந்து மட்டுமே தமிழர் பகுதிகளுக்கு ஊடகவியலாளர்கள் செல்ல முடிகிறது. தமிழர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கும் சில முகாம்களுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தைக் கூட சிறிலங்கா அரசு அனுமதிப்பதில்லை.

போர் நடந்தபோது பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த மக்களுக்கு மருத்துவப் பணியாற்றியது மட்டுமின்றி, அங்குள்ள நிலையை சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துவந்த மருத்துவர்கள் தங்கமுத்து சத்தியமூர்த்தி, துரைராஜா வரதராஜா, வி. சண்முகராஜா ஆகியோரை உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு, அயல் நாட்டு ஊடகங்களுக்கு தகவல் அளித்த தமிழர்களைப் பற்றி சிறிலங்கா இராணுவத்தினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அப்பாவித் தமிழர்கள் அடைத்து வைத்துள்ள முகாம்களுக்குள் சிறிலங்கா அரசிற்கு ஆதரவான துணை இராணுவப் படைகள் (கருணா, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் அமைப்புகள்) ஊடுருவியிருப்பதாகவும், அவர்கள் தகவல் அளிப்பவர்களை இராணுவத்திற்கு அடையாளம் காட்டிவருவதாகவும் அந்த முகாம்களில் பணியாற்றிவரும் மனிதாபிமான ஊழியர்கள் சிலர் தங்களிடம் தெரிவித்ததாக அவ்வமைப்பு கூறியுள்ளது.

அகதிகள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவ உதவிகள் செய்ய அந்நாட்டு சுகாதார அமைச்சகத்திடமிருந்து அனுமதி பெற்றுவந்த பல டசின் கணக்கான செவிலியர்களை முகாம்களுக்கு அனுமதிக்காமல் இராணுவம் திருப்பி அனுப்பி விட்டதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

இராமநாதன் அகதிகள் முகாமிற்கு சட்ட அமைச்சர் வருகை தந்தபோது அந்நிகழ்ச்சியை செய்தியாக்க வந்த ராய்ட்டர் பத்திரிகையாளர் மகாமுனி சுப்பிரமணியத்தை சிறிலங்கா இராணுவத்தினர் மோசமாக நடத்தியதாகவும், அவருடைய விலை உயர்ந்த புகைப்படக் கருவியை காவல்துறையினர் பறித்துக் கொண்டதாகவும், அவரை விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவராக இருப்பார் என்று கூறி, முழுமையாக சோதனையிடுமாறு சிறிலங்கா இராணுவத் தளபதி சந்திரசிறி கட்டளையிட்டதாகவும் அவர் தங்களுக்கு கடிதம் எழுதியிருப்பதாக அவ்வமைப்பு கூறியுள்ளது.

இப்படியொரு சூழ்நிலை இலங்கையில் நிலவிவரும் நிலையில் சிறிலங்கா அரசை பாராட்டி ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது தமிழர்களை அவமானப்படுத்தும் செயலாகும் என்று எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு கூறியுள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.