Tuesday, June 2, 2009

கூட்டமைப்பினரை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டியது அவசியம்- ஜாதிக ஹெல உறுமய

விடுதலைப் புலிகள் என்ற பெயரில் அரசியலுக்குள் நுழைவதற்கு ஒருபோதும் எவருக்கும் இடமளிக்க முடியாது. அந்தப் பெயரைக் கைவிட்டு எவராவது ஜனநாயக நீரோட்டத்தில் இணைய முன்வந்தால் மாத்திரமே அவர்களை ஏற்றுக்கொள்ள முடியும்.
பிரிவினை வாதத்தை எதிர்த்து சத்தியப் பிரமாணம் செய்த தமிழர் கூட்டமைப்பினர் தற்போது அதனை ஆதரித்து பிரசாரம் செய்கின்றனர். எனவே கூட்டமைப்பினரை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டியது அவசியம் என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் நரேந்திர குணதிலக தெரிவித்ததாவது, தமிழர் கூட்டமைப்பை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமென கடந்த மூன்று வருடங்களாக ஹெல உறுமய வலியுறுத்தி வருகின்றது. ஏனென்றால் தமிழர் கூட்டமைப்பின் எம். பி.க்கள் ஜனநாயக ரீதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் வரவில்லை. 2004 ஆம் ஆண்டு இடம் பெற்ற பொதுத் தேர்தலின்போது விடுதலைப் புலிகள் மோசடிகளில் ஈடுபட்டு சிறுவர்களையும் வாக்களிக்கச் செய்து பலாத்காரமாகவே கூட்டமைப்பினரை வெற்றி பெறச் செய்தனர்.

அன்று இத்தேர்தலை கண்காணித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழு யாழ். குடா நாட்டிலும், கிழக்கிலும் இடம்பெற்ற தேர்தல் மிக மிக மோசடியானதென அறிக்கை வெளியிட்டிருந்தது.

எனவே கூட்டமைப்பினருக்கு பாராளுமன்றத்தில் அமரும் அருகதை இல்லை. அத்தோடு நாட்டில் பிரிவினைவாதத்திற்கு துணை போகமாட்டோமென சத்தியப் பிரமாணம் செய்து எம்.பி. பதவிகளை ஏற்றுக்கொண்ட பின்னர் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் விதத்தில் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்.

எனவே இவர்களை உடனடியாக பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டும். பாதுகாப்புச் செயலாளரின் கருத்தை வரவேற்கின்றோம். அதேவேளை விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். எனவே அரசியலில் ஈடுபட சட்டரீதியான உரிமையில்லை. இதனால் அப்பெயரை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்தால் அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்க முடியும். அதைவிடுத்து வேறெந்த வழியிலும் அரசியலுக்குள் நுழைய இடமளிக்க முடியாது. பேச்சுவார்த்தைகள் உடன்படிக்கைகள் என்ற போர்வையில் கடந்த காலங்களில் ஆட்சியாளர்களை ஏமாற்றிய புலிகள் இறுதியில் நாட்டுக்குள் அழிவுகளையே மேற்கொண்டனர்.இவ்வாறான தொடர் கதைகளுக்கு இனியும் இங்கு இடமில்லை.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.