இந்தியப் பொதுத் தேர்தல் முடிவடைந்ததும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 'பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது நடத்திவரும் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருப்பதால், பாரிய உயிரிழப்புக்கள் அந்தப் பகுதியில் இடம்பெறலாம் என்ற அச்சத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கின்றது.
எனவே இந்த அனர்த்த்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு சென்றிருக்கும் பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவையும், கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியையும் நேற்று புதன்கிழமை தனித்தனியாக கொழும்பில் சந்தித்தபோது அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
பிரித்தானிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டெஸ் பிறவுண் தலைமையிலான குழுவையும், ஐரோப்பிய ஒன்றிய வதிவிடப் பிரதிநிதியையும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்தபோது, வன்னி போர் நிலை மற்றும் வவுனியா முகாம்களில் காணப்படும் நிலைமைகள் தொடர்பாக விரிவான முறையில் எடுத்துக் கூறினார்கள்.
இது தொடர்பாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜா பின்வருமாறு தெரிவித்தார்:
"வன்னிப் பேரவலம் இன்று அனைத்துலக மயப்படுத்தப்பட்டுவிட்டது. முழு உலகமும் இந்த விடயத்தில் அக்கறை கொள்கின்ற போதிலும், எவருடைய பேச்சையும் கருத்திற்கொள்ள சிறிலங்கா அரசு தயாராகவில்லை. அது நடைமுறையில் அனைவரும் பார்க்கும் விடயம். பெருமளவு உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் இந்தப் போரை நிறுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை சிறிலங்கா ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.
மிகவும் சிறிய ஒரு பகுதிக்குள் பெருமளவு மக்கள் அடைக்கப்பட்டுள்ள நிலைமையில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாம் என அனைத்துலக சமூகம் கேட்டுக்கொண்டும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
போரினால் மட்டுமன்றி பட்டினியினாலும் மக்கள் மரணமடையும் நிலை இன்று உருவாகியிருக்கின்றது. உணவுப் பொருட்களோ அல்லது மருந்துப்பொருட்களோ அந்தப் பகுதிக்கு அனுப்பப்படுவதில்லை. போர் தொடர்ந்துகொண்டிருப்பதால் இவற்றை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினால் கொண்டுசெல்ல முடியவில்லை.
போர் நடைபெறும் பகுதிக்குள் என்ன நடைபெறுகின்றது என்பது எவருக்குமே தெரியவில்லை. ஐ.நா. சபையோ அல்லது மனிதாபிமான அமைப்புக்களோ அந்தப் பகுதிக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் நாளாந்தம் இறப்பவர்களின் பட்டியலில் பட்டினியால் பலியானவர்களின் விபரங்கள் தெரியவருவதில்லை.
இந்தியாவில் தற்போது நடைபெறும் தேர்தலால் அங்குள்ள போர் நிலைமை சற்று தளர்ந்திருப்பது போன்றதொரு தோற்றப்பாடு உருவாகியிருக்கின்றது. அங்கு தேர்தல் முடிவடைந்தவுடன் தாக்குதல் நடவடிக்கைகள் மிகவும் உக்கிரமடையலாம் என நாம் பேரச்சம் அடைந்திருக்கின்றோம். தேர்தலுக்குப் பின்னர் அங்கு பாரிய தாக்குதல் ஒன்றை அரசாங்கம் நடத்தவிருப்பதாக எமக்குத் தகவல் கிடைத்திருக்கின்றது.
இதனால் அங்கு பாரிய இழப்புக்களை மக்கள் சந்திக்க வேண்டியேற்படும். அரசாங்கப்படையினர் பயன்படுத்தும் ஆயுத வகைகள் குறித்தும் பல தகவல்கள் வெளியாவதால் குறுகிய நிலப்பரப்புக்குள் வசிக்கும் பெருந்தொகையான மக்களைப் பாதுகாக்க அனைத்துலகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இவ்வாறு தெரிவித்த மாவை சேனாதிராஜா, வவுனியாவில் உள்ள அகதி முகாம்களின் நிலைமைகள் தொடர்பாகவும் அவற்றைப் பார்வையிடுவதற்குத் தமக்கு அனுமதி வழங்கப்படாமை பற்றியும் எடுத்துக் கூறினார். இவை அனைத்தையும் கவனமாக அவதானித்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாக தாம் லண்டன் திரும்பியதும் விரிவாக ஆராய்வதாகத் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment