Tuesday, May 5, 2009

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு கொழும்பு வருகை: சிங்கள கடும் போக்காளர்கள் தீவிர எதிர்ப்பு

சிறிலங்காவில் உள்ள சிங்களக் கடும் போக்காளர்களின் தீவிரமான எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பிரித்தானியாவின் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழு சிறிலங்காவுக்கான தமது இரண்டு நாள் பயணத்தை தொடங்கியிருக்கின்றது.
போர் இடம்பெறும் பகுதியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாகவும், வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பாகவும் சிறிலங்கா அரசுடனும் அதிகாரிகளுடனும் ஆராய்வதுதான் இவர்களின் பிரதான நோக்கமாக இருக்கும்.

நேற்று திங்கட்கிழமை மாலை கொழும்பு வந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டெஸ் பிறவுண் முக்கியமானவர்.

சிறிலங்காவுக்கான தமது சிறப்புத் தூதுவராக இவரை கடந்த பெப்ரவரியில் பிரித்தானியா நியமித்தது. இருந்த போதிலும், இந்த நியமனத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துவிட்டது.

இதனால், தற்போது ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலேயே இவரது வருகை அமைந்திருப்பதாக கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

இக்குழுவில் வந்திருப்பவர்கள் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றிரவு கொழும்பு வந்த இவர்கள் இன்று கொழும்பில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர், அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் விவகார அமைச்சர் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்துவதுடன், வவுனியா சென்று இடம்பெயர்ந்தவர்களுக்காக அங்கு அமைக்கப்பட்டுள்ள முகாம்களையும் பார்வையிடுவார்கள்.

இருந்தபோதிலும் இவர்களின் வருகை தொடர்பாக சிறிலங்காவில் உள்ள சிங்களக் கடும்போக்கு அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் பெரும் சீற்றமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

போர் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தும் மேற்கு நாடுகளில் பிரித்தானியா முன்னணியில் இருப்பதால்தான் பிரித்தானியா மீது இந்த அமைப்புக்கள் கடும் சீற்றத்தில் இருப்பதாக அரசியல் கட்சிப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இவர்களின் வருகையைக் கண்டிக்கும் முகமாக கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பெருமளவு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

'பயங்கரவாதத்துக்கு எதிரான தேசிய முன்னணி' என்ற பெயரில் வெளியிட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளில், "பொதுமக்களுக்காக கண்ணீர் சிந்துவதற்கு முன்னர் 1818 இல் கொல்லப்பட்ட 1,00,000 க்கும் அதிகமான மக்களுக்கு நட்ட ஈட்டை வழங்குங்கள்" என இந்தச் சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவை பிரித்தானியா முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர், பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி ஒன்று இடம்பெற்றதாகவும், அதனைக் கட்டுப்படுத்த பிரித்தானிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சிங்களவர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் கடந்த வாரம் கொழும்புக்கு வந்தபோதும் முன்வைக்கப்பட்டிருந்தமை கவனிக்கத்தக்கது.

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகைக்கு சிங்களக் கடும்போக்காளர்கள் மத்தியில் உருவாகியிருக்கும் இந்த எதிர்ப்பின் காரணமாகவும், மேற்கு நாடுகளின் அணுகுமுறை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் கொண்டுள்ள அதிருப்தியின் காரணமாகவும் தமது பயணம் தொடர்பில் பகிரங்கமான அறிக்கைகளை வெளியிடுவதை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர்த்துக்கொள்வார்கள் எனத் தெரிகின்றது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.