
சிரேஸ்ட ஊடகவிலயாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் ஒரு வருடத்திற்கு மேல் இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து கவனம் செலுத்தி வருவதாக அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
உலக ஊடகத் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிம்பாப்வே, பர்மா முதல் உஸ்பெகிஸ்தான் வரையிலான நாடுகளிலும், கியூபா முதல் எரித்திரியா வரையிலான நாடுகளிலும் பாரியளவு ஊடக அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஜே.எஸ். திஸ்ஸநாயகமும், சீனாவில் ஹ_ ஜியா ஆகியோரை இதற்கு சிறந்த உதாரணமாக காட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் திஸ்ஸ நாயகத்தின் மீது இலங்கைப் பாதுகாப்புப் படையினர் பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதேவேளை, சிரேஷ்ட ஊடகவியலாளரும் சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ.மூன் இலங்கை அரசாங்கத்தை கேட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொல்லப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவுக்கு 2009 ஆம் ஆண்டுக்கான யுனெஸ்கோவின் சுதந்திர ஊடகவியலாளர் விருது வழங்கப்பட்டுள்ளதுடன் விருது வழங்கும் விழா கட்டாரில் நாளை நடைபெறவுள்ளது.
லசந்த விக்ரமதுங்க அண்மையில் கொழும்பின் புறநகர் பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
No comments:
Post a Comment