Saturday, May 9, 2009

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெளிநாட்டு விவகார குழு உறுப்பினரும்யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதாவது


பட்டினிச்சாவை எதிர் நோக்கியுள்ள மக்களை காப்பாற்ற உடனடியாக உணவு அனுப்ப நடவடிக்கை எடுக்கும்படி கோரி சர்வதேச சமூகத்தினருக்கு அழுத்தங்களை கொடுக்குமாறு புலம்பெயர்ந்த தமிழ் மக்களை வேண்டுகின்றோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேசமான முள்ளிவாய்க்கால் பகுதயில் இடம் பெயர்ந்து வாழும் 165000 வரையான பொது மக்கள் பட்னிச்சாவை எதிர் நோக்கியுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 15 பொது மக்கள் பட்டினியால் இறந்துள்ளனர்.


பட்டினிச் சாவு ஏற்படத் தொடங்கியுள்ள நிலையிலும் கூட இலங்கை அரசாங்கம் வன்னிக்கான உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல உலக உணவுத் திட்டத்தினருக்கு அனுமதி வழங்காது மறுத்து வருவதுடன் பொது மக்களை இலக்கு வைத்து கடற்படையும் தரைப் படையும் இணைந்து கடுமையான தாக்குதல்களை நடாத்தி வருகின்றன. உடனடியாக தேவையானளவு உணவுப் பொருட்கள் முள்ளிவாயக்கால் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படாவிட்டால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும் ஆபத்து நிலை ஏற்படும்.


கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த தாய் ஒருவர் நேற்று முன்தினம் இரவு குழந்தைக்கு பாலூட்டிய பின்னர் நித்திரைக்குச் சென்றவர் அப்படியே இறந்துள்ளார். கற்பிணித் தாயாக இருந்த போது நீண்ட நாட்களாக கஞ்சி மட்டுமே உணவாக அவருக்கு கிடைத்தது. குழந்தை பிறந்த பின்னரும் போதிய உணவு இல்லாமை காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.


தற்போது அவரது குழந்தை தாய்ப்பாலும் இல்லாது பக்கற் பால்மாவும் இல்லாது உயிரிழக்கும் நிலையிலுள்ளது. 165000 மக்கள் பட்டினிச் சாவை எதிர் நோக்கியுள்ளமை தொடர்பாக ஐநா சபை அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக தெரியவில்லை. ஐநா சபையானது உணவு அனுப்புவதற்கு மேற்கொண்டுவரும் முயற்சியானது அனைத்து மக்களும் பட்டினியால் இறக்கும் வரை தொடரும் நிலையே காணப்படுகின்றது.


உணவு அனுப்பும் விடயத்தில் ஐநா சபையின் நடவடிக்கையானது உணவை ஆயுதமாகப் பயன்படுத்தி மக்களை பட்டினி போட்டு வன்னியில் இருந்து மக்களை பலவந்தமாக வெளியேற்ற முயலும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிக்கு முழுமையாக துணை புரிவது போன்றதாகவே அமைந்துள்ளது.


விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள மக்களில் யாழ்ப்பாணத்திலுள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இருவரும் வவுனியா முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 15ற்கும் அதிகமான முதியவர்களும் பட்டினியால் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


அத்துடன் வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பல நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொண்டு செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் உள்ள Chanal 4 என்ற தொலைக்காட்சி நேரில் சென்று பொது மக்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட உண்மைத் தகவல்களை வெளியிட்டுள்ளது.


இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்த மக்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியில் வல்லுறவுகள் சித்திரவதைகள் போன்ற சம்பவங்களை வெளிவராமல் தடுக்கும் வகையில் சகல விதமான சட்டங்களையும் பொலீஸ் துறையையும் பயன்படுத்தி முழு அளவிலான அடக்கு முறைகளையும் அரசு கையாண்டு வருகின்றது.


கட்டமைக்கப்பட்ட வன்முறைகளை (structural violence) கையாண்டு வைத்திய அதிகாரிகள், நீதிபதிகள், மரணவிசாரணை அதிகாரிகள், அரசாங்க அதிபர்கள், உட்பட அரச உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவன பிரதி நிதிகள் எவரும் சுதந்திரமாக தமது கடமைகளை மேற்கொள்ளவோ கருத்துக் கூறவோ முடியாத நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.


முகாம்களில் 180000 வரையான மக்கள் தங்கியுள்ள போதிலும் குறித்த ஒரு பகுதிக்கு மட்டும் ஐநா அதிகாரிகளும் தூதரக அதிகாரிகளும், ஊடகவியலாளர்களும் அழைத்துச் செல்லப்பட்டு கண்துடைப்புச் செய்யப்படுகின்றது. ஆனால் அகதி முகாம்களில் உள்ள பெருமளவு மக்கள் அனுபவிக்கும் அவலங்களை ஐநா அதிகாரிகள் தெரிந்தும் இன்று வரை அகதி முகாம்களுக்குள் ஊடகவியலாளர்களையும் சர்வதேச தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களையும் சுதந்திரமாக சென்றுவர அனுமதி பெற்றுக் கொடுக்க ஐநா சபைக்கு முடியாமலுள்ளது.


மக்களது தேவைகள் பூர்த்தி செய்யப்படுவது உண்மையானால் மக்கள் மனிதாபிமானத்துடன் நடாத்தப்படுவது உண்மையானால் ஏன் இன்னமும் சுதந்திரமாக ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.இலங்கை விடயத்தில் ஐநா சபை கையாலாகாத நிலையிலுள்ள போதிலும் கூட மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து அனுபவிக்கும் கொடூரங்கள் நன்கு தெரிந்திருந்தும் கூட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து மக்களை வெளியேற்ற முயற்சி செய்வதானது மனித நேயமற்ற ஒரு நடவடிக்கையாகும்.


இவ்விடயத்தினை கருத்தில் கொண்டு வன்னிக்கு போதியளவு உணவுப் பொருட்களை அனுப்பி வைக்க ஐநா சபையும் பிரித்தானியா அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தாங்கள் வாழும் நாடுகளின் அரசாங்கங்களுக்கு கூடுதல் அழுத்தங்களை கொடுக்க வேண்டும். வன்முறையற்ற வழியில் தொடர் போராட்டங்களை நடாத்தி உடனடியாக உணவு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பட்டினியால் உயிரிழப்பதனை யாராலும் தடுக்க முடியாது போகும்.


என்று அவர்விடுத்த வேண்டுகோளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.