Wednesday, May 13, 2009

சிறிலங்கா அரசை எதிர்த்து நாளை மறுநாள் மலேசியாவில் ஆர்ப்பாட்டப் பேரணி

சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்து இன மானமும் மனித நேயமும் கொண்ட மலேசிய தமிழர்கள் நாளை மறுநாள் அணிதிரள வேண்டும் என்று மலேசிய உலகத் தமிழர் நிவாரண நிதியம் அழைப்பு விடுத்திருக்கின்றது.
இது தொடர்பாக மலேசிய உலகத் தமிழர் நிவாரண நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உலகின் எந்த மூலையிலும் நடந்திராத அளவிற்கு மிகக்கொடுமையான மனித பேரவலத்தைச் சந்தித்து நிற்கின்றது வன்னிப்பெரு நிலம்.

வன்னி நிலம் எங்கும் ஓடி, ஓடி ஒதுங்கி - கடைசியில் பாதுகாப்பு வலயத்திற்குள் அடைக்கலம் புகுந்திருந்த மக்களை, ஒட்டுமொத்தமாக படுகொலை செய்வதற்கு அனைத்துவிதமான தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் கொண்டு இப்படுகொலையை சிறிலங்கா அரசாங்கம் செய்து வருகின்றது.

கண்மூடித்தனமான தாக்குதல்கள் மூலம் அப்பாவி மக்களை அச்சுறுத்தி, அவர்களை ஆண், பெண், வயது முதிர்ந்தோர், நோயாளர்கள், குழந்தைகள் வேறுபாடின்றி கொன்று குவித்து உளவியல் ரீதியாகவும், உணவு - மருந்து தடைகள் மூலம் அவர்களைத் துன்புறுத்தி வருகின்றது.

நூறு, இருநூறு என்றிருந்த படுகொலை எண்ணிக்கை இன்று ஆயிரம், இரண்டாயிரம் என உயர்ந்து நிற்கின்றது.

இத்தனை இன்னல்கள் அனுபவிக்கும் அந்த மக்கள் யாருமற்ற அநாதைகள் அல்லர். உலகு எங்கும் பரந்து வாழும் தமிழர்களின் உறவுகள். புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து கடுமையாக போராடி வருகின்றனர்.

வீதி தோறும், முக்கிய அலுவலகங்கள் தோறும், தூதரகங்கள் தோறும் பேரணியாய் அணிதிரண்டு நிற்கின்றனர். உணவு துறந்து, வீடு வாசல்கள் துறந்து வீதியே வாழ்வு என முழங்கி முழங்கி போராடுகின்றனர்.

நாமும் தமிழர்கள்தான். நாம் என்ன செய்கிறோம்? அங்கு சாகின்ற அந்த உறவுகளுக்கு தமிழர்கள் என்ற முறையிலும் மனிதநேயம் மிக்கவர்கள் என்ற முறையிலும் என்ன செய்யப் போகிறோம்?

நமது தொடர் முயற்சியாக நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (15.05.09) மதியம் 12:00 மணிக்கு மீண்டும் சிறிலங்கா தூதரகத்திற்கு முன் மாபெரும் எதிர்ப்புப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் தமிழர்களுக்கு இந்த பேரணி நடைபெறவில்லை. சாவின் விளிம்பில் இரத்தக் களரியில் செத்துக்கொண்டும் உறவுகளைக் காப்பதற்கு கூடுகின்ற பேரணி இது.

இன்றைய இக்கட்டான நிலையில் ஈழத் தமிழ் உறவுகளுக்கு நமது ஆதரவு குரல் மிகத் தேவையானதாய் இருக்கின்றன. அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்த நடக்கவிருக்கும் இம்மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தில் அனைத்து மக்களும் அரசியல் கட்சிகள், பொதுக் கட்சிகள், அமைப்புகள் பேதம் இன்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அணிதிரள வேண்டும்.

தமிழர்களின் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற நமது உறவுகளைக் கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்து பேரணியாய் வீதியில் அணிதிரள வேண்டும்.

மனிதக் கேடயங்களாக தமிழ் மக்களைப் பயன்படுத்தி, தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக்கொண்டு அவர்களைக்கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு நமது கூடியபட்ச கண்டனத்தை வெளிப்படுத்த வரலாறு காணாத பேரணியாய் ஒன்றிணைவோம் என ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.