Saturday, May 16, 2009

அதிக இடங்களில் வெற்றி: மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி; மன்மோகன்சிங் பிரதமர் ஆகிறார்

பாராளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி தொடங்கி மே 13-ந் தேதி வரை 5 கட்டங்களாக நடந்தது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 556 பெண்கள் உள்பட 8 ஆயிரத்து 70 பேர் போட்டியிட்டனர். காங்கிரஸ், பா.ஜ.க., 3-வது அணி, 4-வது அணி என தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 71.3 கோடி வாக்காளர்களில் சுமார் 60 சதவீதம் பேர் வாக்களித்தனர். 8 லட்சத்து 28 ஆயிரத்து 804 ஓட்டுச்சாவடிகளில் நடந்த தேர்தலில் 11 லட்சம் மின்னணு எந்திரங்கள் பயன் படுத்தப்பட்டன.

இன்று காலை 8 மணிக்கு 543 தொகுதிகளிலும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. 1080 மையங்களில் சுமார் 60 ஆயிரம் பேர் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக எந்திரங்கள் எடுக்கப்பட்டு ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.

மொத்தம் 14 சுற்றுக்களாக ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. முதல் சில சுற்றுக்கள் முடிவில் முன்னணி நிலவரம் தெரிந்தது. 8.30 மணி முதல் முன்னணி நிலவரம் பரபரப்பாக வரத்தொடங்கியது.

காங்கிரசும், பா.ஜ.க.வும் போட்டி போட்டு முன்னிலை பெற்றன. காலை 9 மணிக்கு 50 தொகுதிகளில் பா.ஜ.க.வும், 55 தொகுதிகளில் காங்கிரசும் முன்னணியில் இருந்தன.

9.30 மணிக்குப் பிறகு பா.ஜ.க. கூட்டணியை விட காங்கிரஸ் கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பாராத தொகுதிகளில் இருந்தும் முன்னணி நிலவரம் வந்தது.

குறிப்பாக உ.பி., ஆந்திரா, கேரளா மாநிலங்களில் காங்கிரசுக்கு அதிக வெற்றி கிடைத்தது.

2004-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி 417 தொகுதிகளில் போட்டியிட்டு 145 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இந்த தடவை பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கும் பல்வேறு மாநில கட்சிகளுக்கும் இடையே தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. இது காங்கிரஸ் வெற்றியை பாதிக்கக்கூடும் என்று பலரும் நினைத்தனர்.

ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அது பற்றி கவலைப்படவில்லை. ராகுல்காந்தி யோசனைப்படி தங்களை இழிவு படுத்திய மாநில கட்சிகளை தவிர்த்து விட்டு காங்கிரஸ் கட்சி தனியாக தேர்தல் களத்தை சந்தித்தது.

காங்கிரஸ் தலைவர்களின் துணிச்சலான இந்த முடிவுக்கு வாக்காளர்கள் ஆதரவை கொடுத்து வாக்குகளை அள்ளிக்கொடுத்தனர். இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலை விட இந்த தடவை கணிசமான அளவுக்கு கூடுதல் இடங்களை அறுவடை செய்துள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சிக்கு சராசரியாக 150 முதல் 160 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டன. தொலைக்காட்சிகளின் இந்த கருத்துக்கணிப்புகள் தவறானவை என்று காங்கிரஸ் வெற்றி இன்று பறை சாற்றியது.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 245 தொகுதிகளில் வெற்றி பெறுகிறது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் தனித்து நின்று 191 தொகுதிகளில் வெற்றி வாகை சூடுகிறது. கடந்த தேர்தலை விட தற்போது காங்கிரசுக்கு 46 தொகுதிகளில் கூடுதல் வெற்றி கிடைத்துள்ளது.

காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகளில் தி.மு.க. 16 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 13 இடங்களில் வெற்றி பெறுகிறது.

பாராளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. தற்போது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 245 இடங்கள் கிடைத்துள்ளன. காங்கிரஸ் ஆட்சி அமைக்க இன்னும் 22 இடங்களே தேவை.

இந்த எண்ணிக்கை ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு மிக, மிக எளிதாக கிடைத்து விடும். எனவே காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

காங்கிரஸ் கட்சி முன்பை விட சற்று வலுவாக பலத்துடன் ஆட்சி அமைக்கப்போவது குறிப்பிடத்தக்கது. முன்பு கூட்டணி கட்சிகளின் மிரட்டலுக்கு காங்கிரஸ் மிகவும் பயப்பட வேண்டியதிருந்தது. இனி அந்த பிரச்சினைக்கு இடம் இருக்காது.

காங்கிரஸ் கட்சி சார்பில் மன்மோகன்சிங் மீண்டும் பிரதமர் பதவி ஏற்பார் என்று ஏற்கனவே சோனியா அறிவித்திருந்தார். அதன்படி மன்மோகன்சிங் மீண்டும் பிரதமர் ஆகிறார்.

காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தைச்சேராத ஒருவர் 2-வது தடவை தொடர்ச்சியாக பிரதமர் ஆவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. மன்மோகன்சிங்குக்கு இன்று காலை முதலே நாடெங்கும் இருந்து வாழ்த்துக்கள் வந்த படி இருந்தன.

காங்கிரஸ் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று இருப்பது மூத்த தலைவர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவர்கள் இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.

டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள அக்பர் சாலை ரோடு விழாக்கோலம் பூண்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் காங்கிரஸ் அலுவலகம் முன்பு திரண்டு பட்டாசு வெடித்து வெற்றியைக் கொண்டாடினார்கள்.

மேள தாளம் முழங்க காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக நடனம் ஆடியபடி இருந்தனர். நாடெங்கும் காங்கிரஸ் அலுவலகங்களில் இனிப்புகள் வினியோகிக்கப்பட்டன
 

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.