ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனின் இலங்கை விஜயம் தொடர்பில், சபையின் உயர் அதிகாரிகள் இருவர் விளக்கமளித்துள்ளனர். இதன்போது, இறுதி யுத்தம் இடம்பெற்ற மோதல் தவிர்ப்பு வலயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜோன் ஹோம்ஸ், அனைத்துமே அழிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக தெரிவித்தார்.
இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்துக் கட்ட நிவாரண வழங்கல் தொடர்பிலும் இதன் போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் துறை பேச்சாளர் பி. லின் பாஸ்கோ நேரடியாக இதனை விபரித்த நிலையில், அதன் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான உதவிச் செயலர் ஜோன் ஹோம்ஸ் தொலைபேசி ஊடாக பான் கீ மூனின் விஜயம் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.
அவர்கள் இருவருமே, பான் கீ மூன் இலங்கையில் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளையில் உடன் வந்திருந்தனர். இடம்பெயர்ந்தவர்களின் முகாம்களில் தங்கியிருப்பவர்களுடன், பேசக்கூடியதாக இருந்ததாகவும், அவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளக்கூடியதாக இருந்ததாகவும் ஜோன் ஹோம்ஸ் இதன்போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அந்த மக்கள் அதிகரித்த அளவில் இருப்பதால், நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாகவும், அவர்களுக்கு மேலும் நிலங்களும், கூடாரங்களும் தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணப் பணிகளும், அத்தியாவசிய உதவி வளங்களும் மிகவும் அதிகரித்த அளவில் மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாகவும் ஜோன் ஹோம்ஸ் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இலங்கை அதிகாரிகளுடன் பான் கீ முன் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் போது, இடம்பெயர்ந்த மக்களை விரைவில் மீள் குடியேற்றி, அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலான அரசியல் தீர்வினை முன்வைக்குமாறு வலியுறுத்தியதாக ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் புலிகளை அழித்து வெற்றி கொண்டதாக கூறுகிறது. ஆனால், இதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை தமக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பான் கீ மூன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் தொடர்பிலும் ஜோன் ஹோம்ஸ் கருத்து வெளியிட்டார்.
தற்போது ஐக்கிய நாடுகளின் கனரக வாகனங்களின் மூலம் நிவாரணப் பொருட்களை முகாம்களுக்குள் எடுத்துச் செல்வதை அரசாங்கம் தடுத்துள்ளமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முகாம்களில் அதிகரித்த அளவில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளமை, பொது மக்களின் நடமாட்ட சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டிருத்தல், ஆட்பதிவுகளை மேற்கொள்ளல், அந்த பட்டியலை காட்சிப்படுத்தல், குடும்ப வாரியாக தங்க வைத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன் போது, 180 நாட்களுக்குள் அனைத்து இடம்பெயர்ந்தவர்களையும் மீள குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி பான் கீ மூனிடம் உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இறுதி யுத்தம் இடம்பெற்ற மோதல் தவிர்ப்பு வலயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜோன் ஹோம்ஸ், அனைத்துமே அழிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக தெரிவித்தார்.
இதற்கிடையில் மோதல் பிரதேசங்களில் இருக்காத சிலரும், முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஜோன் ஹோம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள் சர்வதேச ரீதியாக அமைய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை எதிர்பார்க்கும் நிலையில், அதனை மேம்படுத்த வேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் அனைத்துலக சமூகத்துடனும் இணைந்து செயற்பட வேண்டிய கட்டாய தருணம் இது எனவும் ஜோன் ஹோம்ஸ் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை மோதல் பிரதேசங்களில் கடமையாற்றிய மூன்று வைத்தியர்கள் தொடர்பிலும், பான் கீ மூன் அவதானம் செலுத்தியதாக ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment