சிறீலங்கா அரசாங்கத்தின் இனவெறியாட்டம் மிகவும் மனதாபிமானம் அற்று மருத்துவமனையை குறிவைத்து தாக்கும் அளவுக்கு கொடூரமாக நிகழ்ந்துகொண்டிருக்கின்ற வேளையில் புலம்பெயர் தமிழ் மக்கள் தங்கள் உறவுகள் உயிரோடு இருக்கிறாளா இல்லையோ? என்ன செய்வது ஏது செய்வதறியாது விறைத்து நிற்கின்ற பொழுதிலும் பிரித்தானியா வாழ் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இன்று புதுவிதமான போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 38 நாட்களாக பிரித்தானிய நாடாளுமன்றம் அதிரும் அளவிற்கு கோரிக்கை கோசங்களை எழுப்பியும் தமிழ் மக்கள் மீது பாராமுகம் காட்டும் பிரித்தானிய அரசாங்கத்திடம் தங்கள் வாய்களை கறுப்பு துணியால் கட்டி அமைதியாக பதாதைகள் மூலம் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். பலரின் கைகளில் “தமிழ் தேசிய தலைவர்” என்று பொறிக்கப்பட்ட தலைவரின் புகைப்படம் காணக்கூடியதாக உள்ளது.
இதேவேளை மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 168 பட்டினி போராட்டத்தை முன்னெடுத்துள்ள அன்ரன் வசந்தராசா(28), கிரிசாந்தன் பாலசந்திரன்(40), நிமலன் சீவரட்ணம்(40), அருளீசன் ஞானசிகாமணி(39), சிவநேஸ்வரி ஜெயகுமார்(40) மற்றும் ரேவதி சிவலோகன் ஆகியோர் 24 மணித்தியாலத்தை கடந்தும் மிகவும் உறுதியுடன் தங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
பல தடைகள் மத்தியிலும் மிகவும் எழுச்சியுடன் முன்னெடுக்கும் இந்த போராட்டத்தில் அனைத்து பிரித்தானிய வாழ் தமிழ் மக்களும் வயது வித்தியாசமின்றி கலந்துகொண்டு தமிழ் மக்களின் இன்றைய நிலமையை உலக நாடுகளுக்கு உணர்த்தவேண்டும் என பிரித்தானியா வாழ் மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
No comments:
Post a Comment