Monday, May 4, 2009

எட்டு நாடுகளில் 14 பேர் சாகும் வரை உண்ணா விரதப் போராட்டம் - பிரான்சில் 28வது நாளாக தொடர்கின்றது


புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ் மக்களின் போராட்டம் மீண்டும் வலுப்பெறத் தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 6ம் திகதி புலம்பெயர்ந்த நாடுகளில் ஆரம்பித்த எழுச்சிப் போராட்டங்களும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டங்களும், சில நாடுகளில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக வலியுறுத்தியதையடுத்து கைவிடப்பட்டிருந்தன. ஆனாலும், ஆரம்பித்ததில் இருந்து இன்று 28வது நாளாக பிரான்சில் இரு இளைஞர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

எனினும், இதுவரை சர்வதேச நாடுகள் எவையினாலும் வன்னியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இனப்படுகொலையை தடுத்து நிறுத்த முடியவில்லை. ஐக்கிய நாடுகள் சபையும், அண்மையில் பிரித்தானிய, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களும் எடுத்த முயற்சிகள் கூட கைகூடாமல் போயுள்ள நிலையில் மீண்டும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் போராட்டங்கள் எழுச்சியடையத் தொடங்கியுள்ளன.

அந்த வகையில் தற்போது உலகின் பல நாடுகளிலும் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, சுவீடன், சுவிஸ், அவுஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் சுமார் 14ற்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறிலங்கா அரசின் தாக்குதல்களால் தமிழ் மக்கள் படுகொலைக்குள்ளாக்கப்பட்டும், படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டும் வரும் நிலையில், இன்னொரு பக்கம் பொருளதாரத் தடைகளை ஏற்படுத்தி பட்டினிச்சாவையும் சிறிலங்கா அரசு ஏற்படுத்தி வருகின்றது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் பசி மற்றும் ஊட்டமின்மையால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 தமிழர்கள் இறந்துள்ளனர். இதேவேளை பட்டினியாலும் ஊட்டமின்மையாலும் அங்குள்ள சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டினியாலும் ஊட்டம் இன்மையாலும் அதிகளானவர்கள் எலும்பும் தோலுமாக காட்சியளிப்பதுடன், நிதானமாக நடக்க முடியாதவர்களாகி உள்ளனர். சிலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவுக்காக இப்போது கஞ்சி மட்டும் வழங்கப்படும் சூழலில், அந்த இடங்களில் சிறுவர்களும் பெரியவர்களும் பெரும் வரிசைகளில் நிற்கின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் மயங்கி வீழ்கின்ற நிலையும் காணப்படுகின்றது. இவ்வாறாக சிறீலங்காவின் உணவுத் தடையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வன்னியின் நிலைமை இவ்வாறு இறுக்கமடைந்து செல்லும் நிலையிலும் சர்வதேசம் மௌனமாக செயற்படுகின்றது. இதுவரை செயல்வடிவில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் மீண்டும் புலம்பெயர்ந்த மண்ணில் போராட்டங்கள் விரிவாக்கம் பெறத் தொடங்கியுள்ளன.

பிரான்சில்

பிரான்சில் 30 நாட்களுக்கு மேலாக தமிழினப் படுகொலைகளுக்கு எதிராகவும், நிரந்தரமான உடனடிப்போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், மக்கள் எழுர்ச்சிப்போராட்டம் நடைபெறும் அதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை 28 நாட்களை உண்ணா நிலைப்போராட்டம் எட்டியுள்ளது. நான்கு இளைஞர்கள் ஆரம்பித்த இப்போராட்டத்தை இப்போது செல்வகுமார், நவநீதன் என்ற இரு இளைஞர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்கள். தற்போது றீப்பப்ளிக் சுதந்திர சதுக்கப் பகுதில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உண்ணா நிலைப்போராட்டத்திற்கு தொடற்சியாக மக்களை வருகைதந்து ஆதரவினை வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுகொண்டுள்ளனர்.

பிரித்தானியாவில்

பிரித்தானிய அரசாங்கம் பரமேஸ்வரனுக்கு கொடுத்த உறுதி மொழி நிறைவேற முன் தமிழீழ தாயக்கத்தில் தமிழினம் அழிந்து விடுமோ என்ற பயத்தில் அந்த உறுதி மொழி விரைவில் நிறைவேற்றப்படவேண்டும் என்பதை தங்களுடைய முதன்மை கோரிக்கையாகவும் பரமேஸ்வரனின் 5 அம்ச கோரிக்கைக்கு ஆதரவளித்தும் 4 பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை 1ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணியில் இருந்து ஆரம்பித்துள்ளனர்.

பரமேஸ்வரன் உடன் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்து சிவாவும் இதில் உள்ளடங்கியுள்ளார். உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் "எங்கள் உண்ணாநிலைப் போராட்டத்தின் கோரிக்கையை ஆதரித்து பல ஆயிரக்கணக்கான பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் சுழற்சி முறையில் நாடாளுமன்ற சதுக்கத்தில் கூடி தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு காலம் வரும் வரை போராட வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.
சுவீடனில்

சுவீடன் பாராளுமன்ற முன்றலில் ஈழத்தமிழர் நந்தன் என்பவரால் நடாத்தப்படும் உண்ணாநிலைப் போராட்டம் 8வது நாளாகத் தொடர்கின்றது. அவருக்கு ஆதரவு தெரிவித்து அடையாள உண்ணாவிரதத்தைப் பலரும் மேற்கொண்டு வருகின்றனர். உண்ணாவிரதம் நடைபெறும் இடத்தில் கூடியிருக்கும் மக்கள், சிறிலங்காவின் இனப்படுகொலையை அம்பலப்படுத்தும் துண்டுப்பிரசுரங்களை அந்நாட்டு மக்களுக்கு விநியோகித்து வருகின்றனர். அதேவேளை, தமிழீழத் தனியரசை அங்கீகரிக்கக்கோரிய கையெழுத்துவேட்டையும் நடைபெற்றது.
சுவிசில்

சுவிஸில் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாநிலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று 04.05.09 மாலை 16.30 மணிக்கு பேர்ண் பாராளுமன்ற முன்றலில் கரன் எனும் இளைஞர் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை ஆரம்பித்தார்.

1. உடனடியாக போரை நிறுத்த வேண்டும்.

2. வன்னி மக்களுக்கான உணவு மற்றும் மருந்துகளை அனுப்பி வைக்க வேண்டும்.

எனும் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தும், சுவிஸ் அரசாங்கத்தின் மௌனத்தைக் கலைத்து உடனடி நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

எத்தனை இடர்கள் தடைகள் வரினும் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு இரவு பகலாக உறுதி தளராது இப் போராட்டம் தொடருமென கூறி இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ள தமக்கு அனைத்து சுவிஸ் வாழ் மக்களும் தொடர் ஆதரவை வழங்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றனர்.

ஜேர்மனியில்

ஜேர்மனியில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிக்கு டுசில்டோவ் மாநிலப் பாராளுமன்றத்திற்கு முன்பாக ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும், வன்னி மக்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே கிரி, ராகுல் ஆகிய இரு இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அவுஸ்ரேலியாவில்


அவுஸ்ரேலியா சிட்னி நகரில் மீண்டும் உண்ணாநிலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு அவுஸ்ரேலியா அரசாங்கம் கொடுத்த உறுதிமொழிகளைத் தொடர்ந்து உண்ணா நிலையைக் கைவிட்ட சுதாகரன் அவர்கள், அவுஸ்ரேலியா அரசாங்கம் உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியதைத் தொடர்ந்து மீண்டும் தனது உண்ணாநிலைப் போராட்டத்தினை ஞாயிறு மீண்டும் ஆரம்பித்துள்ளார்.

Parramatta Church Street இல் உடனடி நிரந்தரப் போர் நிறுத்தம் அமுல்படுத்த வேண்டும், போர் தளத்தில் இருக்கும் தமிழ் உறவுகளுக்கு அத்தியாவசியமான உணவு மற்றும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யவெண்டும், பேர் தளத்தில் தவிக்கும் தமிழ் மக்களுக்கு மருத்துவ உதவி உடனடியாகச் சேர்ப்பிக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளினை முன்வைத்தே இவ் உண்ணாநிலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை தனது உண்ணாநிலைப் போராட்டம் தொடரும் என சுதாகரன் உறுதி தெரிவித்துள்ளார்.
கனடாவில்

கனடாவில் ரொறன்ரோ நகரில் அமைந்துள்ள ஒன்ராரியோ மாகாண பாராளுமன்றத்தின் முன்பாக (02-05-2009) ஞாயிற்றிக்கிழமையன்று மதியம் 12.00 மணிக்கு மாதகல் குணம் என அழைக்கப்படும் வீரகத்திப்பிள்ளை குணபாலசுந்தரம் அவாகள் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

இவர் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்கின்றார்;

*சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழினப்படுகொலையை நிறுத்துவதற்கு உடனடிப் போர்நிறுத்தம் மேற்கொள்ளும் முகமாக சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்
*உணவு, மருந்து மற்றும் அவசிய பொருட்களை வான்வழியாக வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
*சிறீலங்கா அரசுக்கு எதிராக இராஜரீக-பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்
*ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைக் கனடிய அரசு அங்கீகரிப்பதன் ஊடாக நிரந்தர சமாதானத் தீர்வை ஏற்படுத்த வேண்டும்
நீண்டகாலமாக தமிழ்த்தேசியத்துக்காக பணியாற்றிய குணம் அவர்கள் திலீபனின் வழியில் தான் திடமாகவும் உறுதியாகவும் உண்ணா நோன்பைத் தொடர்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்தில்

நெதர்லாந்து நாடாளுமன்ற முன்றலில் ஏற்கனவே இருதாய்மார்கள் 14 நாட்களாக உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். நெதர். நாடாளுமன்றத்திலும் சிறீலங்காப் போர்பற்றிய காத்திரமான விவாதம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில் ஐ.நா மன்றின் மூலம் சிறீலங்காவில் போர்நிறுத்தத்திற்கு உடனடியாக அழுத்தம் கொடுக்கப்படும் என்று முடிவுஅறிவிக்கப்பட்டதால் உண்ணாநிலைப்போராட்டம் 21.04.2009 அன்று 14 ஆவது நாளில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது.

ஆனால், இதுவரை சிறீலங்காஅரசு போரை நிறுத்தாமல், சர்வதேச சட்டங்களையும் மதியாமல் தொடர்ந்தும் தமிழர்களிற் கெதிராக தமிழின அழிப்புப் போரை குறுகிய நிலப்பரப்பான முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் மக்களிற்கெதிராக நடாத்திக் கொண்டிருக்கின்றது. அத்துடன் உணவையும் மருந்தையும் போராயுதமாகப் பயன்படுத்தி மக்களை பட்டினிபோட்டு கொன்று கொண்டிருக்கின்றது.

எனவே, சிறீலங்கா அரசானது, உடன் போரை நிறுத்தவேண்டும் வன்னியில் பட்டினிச்சாவிலுள்ள மக்களிற்கு உணவு மருந்துகளை உடன் அனுப்பவேண்டும் என்ற முக்கிய மனிதாபிமான இருகோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை மீண்டும் நேற்று முன்தினம் ஞாயிறு மதியம் முதல் டென் காக்கிலுள்ள நாடாளுமன்ற முன்றலில் உயர்தரவகுப்பு கணனித்துறை மாணவனான கண்ணா ஜெயா (18 வயது) என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.

இவருடன் நேற்று காலை (04.05.09) கல்பனா கந்தசாமி (37 வயது) என்ற தாயாரும் இப்போராட்டத்தில் தன்னை இணைத்துள்ளார். மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை தங்கள் இப்போராட்டம் தொடரும் என மனுவொன்றை இன்று வெளிநாட்டமைச்சிடம் இவ்விருவரும் கையளித்துவிட்டு தங்கள் போராட்டத்தை தொடருகின்றனர்.

அனைத்து மக்களையும் இம்முன்றலில் ஒன்றுகூடி இவர்களின் கோரிக்கைகளிற்கு வலுச்சேர்க்குமாறு இவ்விருவரும் கேட்டுக்கொள்கின்றார்கள்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.