தரையில் களநிலைமைகள் இவ்வாறிருக்க கடற்பகுதியில் தமது பலத்தை வெளிப்படுத்த முனைந்த கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் கடந்த வாரத்தில் முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் கடுமையான சமர்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தச் சமர்களில் பெரும்பாலானவை நேருக்கு நேரான மோதல்களாக இருந்துள்ளன.
முள்ளிவாய்க்கால் பகுதியில் தரையிறக்கம் ஒன்றை மேற்கொள்ளும் இலக்குடன் கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே கடற்சமர்கள் பெருமளவுக்கு இடம்பெற்றுள்ள போதிலும் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சமர் ஒன்று சிறிலங்கா கடற்படைக்குப் பாரிய பின்னடைவைக் கொடுத்திருப்பதை கடற்படை வட்டாரங்கள் ஒப்புக்கொண்டிருக்கின்றன.
இந்தச் சமரில் கடற்படையின் சிறப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் இந்த சிறப்பு கடற்படைப் பிரிவின் இரண்டாவது கட்டளைத் தளபதியும் ஒருவர் என்பது சிறிலங்கா கடற்படைக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.
விடுதலைப் புலிகளால் வைக்கப்பட்டிருந்த 'பொறி' ஒன்றுக்குள் இவர்கள் கவர்ந்து இழுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முள்ளிவாய்க்கால் கடற்பகுதியில் தொடரும் போரில் கடற்படையின் இந்த சிறப்புப் பிரிவினரே முக்கிய பங்கை வகித்து வந்துள்ளனர்.
முல்லைத்தீவு கடற்கரைப் பகுதியில் விரைவாகச் சென்றுகொண்டிருந்த படகு ஒன்றைக் கண்ட இவர்கள் தமது படகில் அதனைக் கைப்பற்றும் நோக்கத்துடன் துரத்திக்கொண்டு சென்றுள்ளார்கள். ஆனால் அது ஒரு ஆட்களற்ற படகு என்பதை அதனை அண்மித்த பி்ன்னரே அவர்களால் தெரிந்துகொள்ள முடிந்தது.
கடற்புலிகள் தம்மை ஏமாற்றி ஒரு பொறிக்குள் விழ வைத்துவிட்டார்கள் என்பதை அவர்கள் உணர்ந்தபோது தொலைக்கட்டுப்பாட்டில் இயங்கும் அந்தப் படகு பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
அருகே சென்றிருந்த கடற்படைப் படகும் சிதறியது. அதில் இருந்த கடற்படை சிறப்புப் பிரிவின் இரண்டாவது கட்டளைத்தளபதியும் 11 கடற்படையினரும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
லெப்டினன்ட் கொமாண்டர் நிலையில் முன்னர் இருந்த குறிப்பிட்ட கடற்படை அதிகாரி மரணமடைந்த பின்னர் கொமாண்டராக உயர்த்தப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment