வன்னியில் மிகப்பெரிய மனித அவலம் நிகழ்ந்ததான செய்தி வெளியாகியதைத் தொடர்ந்து சூரிச்சில் சனிக்கிழமை மனித சங்கிலிப்போராட்டத்துடன், ஜெனிவாவில் ஐ.நா. முன்றலில் ஞாயிறு பிற்பகல் முதல் குழுமிய ஆயிரக் கணக்கான மக்கள் கோசங்களை எழுப்பினர்.
இரவிரவாக அங்கே நின்ற மக்களுடன் இன்று காலை முதல் ஆயிரக் கணக்கில் திரண்ட மக்கள் நண்பகலுக்குப் பின்னர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் சற்றுப் பின்னர் வன்முறையாக வெடித்தது. இதனையடுத்து தண்ணீர்ப் பிரயோகம் செய்த காவல்துறையினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முட்டை மற்றும் போத்தல்களை வீசியதையடுத்து தடியடிப் பிரயோகம் செய்தனர். இதன்போது ஒரு சிலர் காயங்களுக்கும் இலக்காகினர்.
இதேவேளை, திடீரென ஐ.நா. வளாகத்துக்குள் பாய்ந்து சென்ற இளைஞர் ஒருவர் அங்கே பறந்து கொண்டிருந்த சிறி லங்கா தேசியக் கொடியை கிழித்து அகற்றினார்.
குறித்த இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டதை அடுத்து கூடியிருந்தோர் மத்தியில் ஆவேசம் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து வீதிகளின் பலபக்கங்களிலும் பிரவேசித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் போக்குவரத்தைத் தடைசெய்ததுடன் காவல் துறையினருடன் பலத்த வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
ஒரு சந்தர்ப்பத்தில் காவல் துறையினருடனான முரண்பாடு பெரும் மோதலாக வெடித்தது. சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பை வாளிகளால் காவல் துறையினர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட போதிலும், காவல் துறையினர் குறைந்தளவிலான பலத்தையே பிரயோகித்ததை அவதானிக்க முடிந்தது. மறுபுறம், காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் உக்கிரமடைந்ததை அடுத்து பெருமளவிலான மக்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கினர்.
இதேசமயம், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளையோர் பிரதிநிதிகள் மூவர் ஐ.நா. சபைக்குள் சென்று பேச்சுக்களில் ஈடுபட்டனர். சிறி லங்கா அரசின் அனுமதி இன்றி அந்த நாட்டுக்குள் பிரவேசிக்கவோ, முறையான ஆதாரங்கள் இன்றி சிங்கள அரசின் மீது போர்க்குற்ற விசாரணைகளை நடாத்தவோ தமக்கு அனுமதி இல்லை என அங்கே தெரிவிக்கப் பட்டதாக அறிவிக்கப் பட்டது.
No comments:
Post a Comment