இலங்கையில் தமிழனும், சிங்களவனும் சேர்ந்து வாழ முடியாது என்றும், இலங்கை பிரச்சனைக்கு தமிழ் ஈழம் தவிர வேறு தீர்வு இல்லை என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
ஈழத் தமிழர்களை பாதுகாக்க ஐ.நா மன்றம் நேரடியாக தலையிட்டு பொறுப்பேற்க வேண்டும். முகாம்களில் உள்ள மக்கள் விடுவிக்கப்பட்டு அவர்கள் சொந்த வீடுகளுக்கு திரும்ப வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்ச, சிங்கள இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை போர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற ஐ.நா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் வற்புறுத்தும் வகையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று மாலை எழுச்சி பேரணி நடைபெற்றது.
சென்னையில் நடந்த எழுச்சி பேரணி முடிவில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவரை யாரும் கொல்ல முடியாது. தமீழம் மலரும் வரையல்ல, அதனுடைய வளர்ச்சியை பார்த்து விட்டே அவர் இயற்கையான மரணத்தை தழுவுவார். இன்றைக்கு வந்த இணையதளத்திலே வந்த தகவல்படி, புலிகளின் கடைசி நேர தாக்குதலில் 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். தலைவர், தளபதிகள் எவ்வாறு வெளியேறினார்கள் என்ற தகவலோடு வந்துள்ளது.
இப்போது நம்முடைய கோரிக்கையெல்லாம் இந்திய அரசு இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்பதல்ல. இனி, என்றுமே நாம் அதை கேட்கப்போவதில்லை. அதனால் எந்த நன்மையும் இல்லை என்று நமக்கு தெரியும். இனி சர்வதேச சமுதாயம், சர்வதேச நாடுகள், ஐ.நா மன்றம் இவைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக தாய்த் தமிழகத்திற்கான நம்முடைய வேண்டுகோள் இருக்க வேண்டும்.
எம்.கே.நாராயணனும், சிவசங்கர் மேனனும் இலங்கைக்கு ஏன் சென்றிருக்கிறார்கள் தெரியுமா? இறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக சென்றிருக்கிறார்கள். ராஜபக்சேவை பாராட்டி இனிப்பு வழங்குவதற்காக சென்றிருக்கிறார்கள். இங்கே இருக்கிற தலைவர் இதற்காக டெல்லியில் உட்கார்ந்து கொண்டு எம்.கே.நாராயணனுடன் 15 நிமிடங்கள் பேசினார்.
உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் இன்றைக்கு புலிகளாக மாறியிருக்கிறார்கள். ஆக, இந்த போரின் மூலமாக நமக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வெற்றி, உலகத்தமிழர்கள் எல்லாம் இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளார்கள். அதே நேரத்திலே இங்கே தமிழீழத்தை தவிர, வேறு தீர்வு இல்லை என்பதை உலக மக்களுக்கு, உலக நாடுகளுக்கு சொல்லியாக வேண்டும்.
இங்குள்ள மார்க்சிஸ்ட் தோழர்களுக்கும் சொல்லியாக வேண்டும். இலங்கை இறையாண்மைதான் மிக முக்கியம் என்று பேசுவார்கள். சீனாவை கண்டிக்க அவர்கள் முன்வருவார்களா? வரமாட்டார்கள். அதே போல் மற்ற கட்சிகளுக்கும் சொல்கிறேன். விவாதங்களுக்கு நாங்கள் தயார். சிங்களவனும், தமிழனும் எந்த காலத்திலும் சேர்ந்து வாழ முடியாது என்பதற்கான காரணத்தை நாங்கள் சொல்கிறோம். தமிழீழத்தை நோக்கித்தான் நம்முடைய பரப்புரை இருக்க வேண்டும். தமிமீழத்தை அடைவதற்கான பரப்புரையை மேற்கொள்ள வேண்டும்'' என்று ராமதாஸ் பேசினார்.
No comments:
Post a Comment