முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்டுள்ள பகுதியின் பரப்பளவை குறைத்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இந்த அறிவிப்பின்படி சுமார் நான்கு சதுர கிலோ மீற்றர் பரப்பளவுதான் 'பாதுகாப்பு வலயம்' என இனிமேல் கணிக்கப்படும்.
ஏற்கனவே முல்லைத்தீவின் கரையோரமாகவுள்ள சுமார் 20 சதுர கிலோ மீற்றர் பகுதி பாதுகாப்பு வலயம் எனப் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் சிறிலங்கா படையினர் இந்தப் பகுதி மீது மேற்கொண்ட பாரிய படையெடுப்பைத் தொடர்ந்து இந்தப் பகுதியின் பரப்பளவு வெகுவாகக் குறைந்திருக்கின்றது.
இதனால் ஏற்பட்டிருக்கும் களநிலை மாற்றங்களைக் கருத்திற்கொண்டே பாதுகாப்பு வலயம் தொடர்பான பிரகடனத்தில் தற்போது புதிய மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார அறிவித்திருக்கின்றார்.
இதனால் புதிதாக பாதுகாப்பு வலயமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் குறுகிய நிலப்பகுதிக்குள் செல்லுமாறு மக்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார வெளியிட்டுள்ள அறிவித்தலில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது:
"தற்போதைய கள நிலைமைகளைக் கருத்திற்கொண்டே பாதுகாப்பு வலயம் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது. அங்குள்ள மக்கள் அடர்த்தியாகவிருக்கும் பகுதிகளை கவனத்திற்கொண்டே இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. கரைய முள்ளிவாய்க்கால் பகுதியின் தென்பகுதிக்கும், வெள்ளமுள்ளிவாய்க்காலின் வடபகுதிக்கும் உட்பட்ட இடமே தற்போதைய நிலையில் புதிய பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருக்கின்றது.
இரண்டு கிலோ மீற்றர் நீளமும், சுமார் ஒன்றரைக் கிலோ மீற்றர் அகலமும் கொண்ட பகுதியே புதிய பாதுகாப்பு வலயமாகக் கருதப்படும். இதற்கு வெளியால் உள்ள பகுதிகளில் இராணுவத்தினரின் தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும்" எனவும் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
No comments:
Post a Comment