Wednesday, May 20, 2009

நடுக்கடலில் 9 நாட்கள் தவித்தபோது பட்டினியால் இறந்த 8 பேரின் உடல்களை கடலில் தூக்கி எறிந்ததாக கூறுகிறார்கள் புது மாத்தளனில் இருந்து புறப்பட்ட மக்கள்

நடுக்கடலில் 9 நாட்கள் தவித்தபோது பட்டினியால் இறந்த 8 பேரின் உடல்களை கடலில் தூக்கி எறிந்ததாக மண்டபம் முகாமுக்கு சென்ற இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை முல்லைத்தீவில் இருந்து கடந்த மாதம் படகில் தப்பி சென்றவர்கள் திசை மாறி ஆந்திரா கடல் பகுதிக்கு சென்றுள்ளனர்.

9 நாட்கள் நடுக்கடலில் தத்தளித்த இவர்களில் பலர் பட்டினியால் இறந்துள்ளனர். மீதம் இருந்த 11 பேரை ஆந்திர மீனவர்கள் காப்பாற்றி காக்கிநாடாவுக்கு அழைத்துச் சென்றனர்.


அங்கு சில நாட்கள் தங்க வைக்கப்பட்ட இவர்கள் அங்கிருந்து சென்னை அழைத்து வரப்பட்டு பின்னர் கொழும்பு மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

யாழ்பாணம் பருத்திதுறையை சேர்ந்த இந்திரகுமார், ஜெயநிரஞ்சனா, இந்திர மேனன், சாந்தா, ஜெயமாலை சகாய தேவி, யாழ்பாணம் பூநகரியை சேர்ந்த அருள்தாஸ், மேரி ஜெபின் , பாத்திமா , சேசுராசு, முல்லை தீவை சேர்ந்த ஜெகதீஸ்வரன், 8 மாத குழந்தை குபேரன் ஆகிய 11 பேரும் நேற்று தொடரூந்து மூலம் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கியூ பிரிவு காவற்துறையினரால், மண்டபம் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர்களிடம் கியூ பிரிவினர் மற்றும் மத்திய புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்திய பின்னர், மண்டபம் முகாமில் பதியப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தமது பயணம் குறித்து விபரித்த இலங்கை தமிழர்கள், இலங்கையில் போர் காரணமாக உயிர் பிழைத்தால் போதும் என யாழ்பாணத்தை சேர்ந்த தாங்கள் 23 பேர் முல்லை தீவு மத்தாளத்தில் இருந்து கடந்த மாதம் 20‐ந் திகதி பிளாஸ்டிக் படகில் புறப்பட்டோம்.

கடலில் வரும்போது திடீரென அதிகமாக காற்று வீசியதால் படகு திசைமாறி ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதிக்கு சென்று விட்டது. திசை மாறியதால் கரை செல்ல வழி தெரியாமல் 9 நாட்களாக நடுக்கடலில் போதிய உணவு இல்லாமல் நடுக்கடலில் தத்தளித்தோம். குழந்தைகள் பசி, பட்டினியால் வாடி அழத்தொடங்கின.

நாட்கள் செல்லச்செல்ல தம்முடன் சென்ற 32 வயதான மேரி திரேசிகா, 10 வயதான நிரேஷன், 12 வயதான தங்கமானன், 4 வயதான அமநேசன், ஹரிகரன், 14வயதான சகாய ராஜ், குழந்தை பிரசாந்த் ரவி ஆகியோர் உடல் சோர்வடைந்து ஒவ்வொருவராக பட்டினியால் படகிலேயே இறந்து விட்டனர்.

வேறு வழியில்லாததால் தம் கண் முன்னே உயிரிழந்த அவர்களை கடலில் தூக்கி வீசியதாக, மண்டபம் சென்ற தமிழர்கள் கூறியுள்ளனர்.

இந்த மரணங்களால் அச்சமடைந்த படகோட்டிகள் மகாலிங்கம், மரியதாஸ், சூசைதாஸ், வாலதாஸ் ஆகியோர் நீந்தி தப்பிவிடலாம் என கடலில் குதித்து நீந்திச்சென்றனர்.

அவர்கள் கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை. மேலும் 8 மாத கைக்குழந்தையை காப்பாற்ற தாய்ப் பால் கொடுத்ததால் உடல் சோர்வடைந்து பட்டினியால் ஜெகதீஸ்வரன் என்பவரின் மனைவி உயிரிழந்துள்ளார்.

மீதம் உள்ள 11 பேரும் உயிர் பிழைப்போமா? கரை சேருவோமா? என கவலையில் ஆழ்ந்திருந்த நிலையில் கடலில் தத்தளித்த தம்மை அந்த வழியாக மீன் பிடித்து விட்டு சென்ற மீனவர்கள் காப்பாற்றி காக்கிநாடா காவற்துறை நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் மருத்துவமனையில் எமக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 29 ஆம் திகதி ஆந்திரமாநிலத்தில் இருந்து கியூ பிரிவு காவற்துறையினர அதிகாரியின் பாதுகாப்புடன் சென்னை சென்று, அங்கிருந்து தொடருந்தில் மண்டபம் சென்றதாகவும். தமது நிலைமை இனி எந்த ஒரு மனிதனுக்கும் வரக்கூடாது என முல்லைத்தீவில் இருந்து சென்று உயிர் பிழைத்த தமிழர்கள் தெரிவித்துள்ளனனர்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.